சென்னை: சென்னையில் அடுத்த மாதம் முதல் ஏரியா சபைகளை நடத்த வேண்டும். அக்கூட்டங்களில் சொத்துவரி செலுத்தாதோர் விவரங்களை வெளியிட வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர் அல்லது தலைவர், நிலைக்குழு தலைவர், மண்டல தலைவர் பதவிகள் உள்ளன. வார்டுக்கு தேவையான திட்டங்களை பரிந்துரைப்பது, குறைகளை தெரிவித்து தீர்வு காண்பது போன்ற பணிகளை மேற்கொள்ள வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபைகளை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் வார்டு கமிட்டிகள் அமைக்கப்படும். கமிட்டியின் தலைவராக அந்த வார்டின் கவுன்சிலர் இருப்பார். 3 மாதத்துக்கு ஒரு முறை அவரது தலைமையில் வார்டு கமிட்டி கூட்டம் நடைபெற வேண்டும் என தமிழக அரசு விதிகளை வகுத்துள்ளது.
அரசின் அறிவுறுத்தல் படி, சென்னைமாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் தலா 10 ஏரியா சபைகள் என 2ஆயிரம் ஏரியா சபைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துக்கும், தொடர்புடைய வார்டு கவுன்சிலர் தலைவராகவும், வார்டு உதவி பொறியாளர் செயலராகவும் இருப்பார்கள்.
ஏரியா சபையை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பான, சபை செயலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் ஆணையர் பேசும்போது, ‘‘ஏப்ரல் முதல் ஏரியா சபை கூட்டங்களை நடத்த வேண்டும்.
இவற்றில் அப்பகுதியில் நடைபெற்று வரும் பணிகள், வளர்ச்சிப் பணிகள், சொத்து வரி செலுத்தாதோர் விவரங்களை பார்வைக்கு வைக்க வேண்டும். கூட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை, குப்பையை வகை பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, கொசுஒழிப்பு நடவடிக்கைகள் குறி்த்து விவாதிக்க வேண்டும்’’ என அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் துணை மேயர் மு.மகேஷ்குமார், துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) விஷூ மகாஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.