சிவகங்கை: சிவகங்கையை சுற்றிலும் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவதால், மக்கள் நடமாட முடியாமல் அச்சமடைந்துள்ளனர். அதேநேரம், குற்றங்களை தடுக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
சிவகங்கையில், மானாமதுரை சாலை, இளையான்குடி சாலை, மேலூர் சாலை, மதுரை சாலை, வண்டவாசி சாலைகளில், கடந்த 2 வாரங்களில் மட்டும் கத்தியை காட்டி 7 வழிப்பறி சம்பவங்கள் நடை பெற்றுள்ளன.
சில சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும், வழிப்பறி சம்பவங்கள் குறையவில்லை. மது, கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான சிறுவர்கள் மற்றும் 25 வயதுக்குட் பட்ட இளைஞர்களே வழிப்பறிச் சம்ப வங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், பணம் கொடுக்க மறுப்ப வர்களை கத்தியால் குத்திவிட்டு தப்பிவிடுகின்றனர். இச்சம்பவங்களால் இரவு 7 மணிக்கு மேல் சாலைகளில் மக்கள் நடமாட முடியாத நிலை ஏற் பட்டுள்ளது.
இது குறித்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தாலும், இதை தடுக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். இதே நிலை நீடித்தால், சிவகங்கை வாழ தகுதியில் லாத நகராக மாறிவிடும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், சிவகங்கை நகரில் உள்ள சாலைகளில் சோதனைச் சாவடிகள் இருந்தன.தற்போது மதுரைச் சாலையில் மட்டுமே உள்ளது.
இதனால், சமூக விரோதிகளை கண்காணிக்க முடியவில்லை. மேலும், சிவகங்கை நகருக்கு ஒரே ஒரு காவல் நிலையம் மட்டுமே உள்ளது. அங்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப போலீஸாரின் எண்ணிக்கை போதிய அளவில் இல்லை.
போலீஸார் பற்றாக்குறையால் சமூக விரோதிகளை கண்காணிக்க முடியாத நிலை உள்ளது. இரவில் செயல்படுத்தப்பட்ட ‘இ-பீட்,’ மொபைல் வாகனம் போன்றவையும் பயன்பாட்டில் இல்லை. சிவகங்கை பேருந்து நிலையத்தில் உள்ள போலீஸார் கண்காணிப்பு அறையும் பல ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கிறது. இதற்கு, போலீஸார் பற்றாக்குறையே காரணமாகக் கூறப் படுகிறது.
எனவே, குற்றங்கள் அதிகம் நடைபெறும் இடங்களில் கூடுதல் போலீஸாரை பணியில் அமர்த்தியும், நகரில் மற்றொரு காவல் நிலையம் அமைத்தும், இரவு நேரங்களில் போலீஸார் தொடர் கண்காணிப்பிலும் ஈடுபட்டு குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.