கோப்புப்படம் 
தமிழகம்

மின்வேலியில் சிக்கி பலியாகும் யானைகள்: அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: மின்வேலியில் சிக்கி யானைகள் பலியான விவகாரம் தொடர்பாக, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஏப்ரல் 19-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வன விலங்குகள் பாதுகாப்பு, யானைகள் பாதுகாப்பு மற்றும் வேட்டை தடுப்பு, வனத்துறை அதிகாரிகள் நியமனம் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன.

அப்போது மனுதாரர்கள் முரளிதரன் மற்றும் சொக்கலிங்கம் தரப்பில், "தர்மபுரியில் மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் பலியானது. அதில் உயிர் தப்பிய இரு குட்டி யானைகளையும், யானைக் கூட்டத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த இரு குட்டி யானைகளையும் யானைகள் கூட்டத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்காததால் அவை தற்போது எங்கிருக்கின்றன என்பது தெரியவில்லை" என்று புகார் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், "தற்போது இரு யானை குட்டிகளும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் ஆண் யானை ஒன்றுடன் சேர்ந்துள்ளன. இதுகுறித்து புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்யப்படும்" எனத் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஏப்ரல் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

மேலும், மின்வேலியில் சிக்கி யானைகள் பலியாவதைத் தடுக்க உரிய விதிமுறைகளை அமல்படுத்தாதது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆகியோர் ஏப்ரல் 19ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT