சென்னை: 23ம் புலிகேசி படம் போன்று தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
டெல்லி செல்லும் முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான கேள்விக்கு, " 23ம் புலிகேசி படம் போன்று தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு உள்ளது. தினசரி காலை முதல்வர் டிஜிபியிடம் நம்மைப் பற்றி சமூக வலைதளங்களில் யார் தவறாக பேசி உள்ளனர் என்று தான் கேட்கிறார். இவர்களை கைது செய்ய தான் இந்த அரசு முனைப்பு காட்டுகிறது. சமூக வலைதளத்தில் கருத்து பதிவிடுபர்களை கைது செய்ய காவல்துறை ஓடிக் கொண்டு உள்ளது. முதல்வருக்கு சமூக வலைதளத்தில் வரும் கருத்துகள் முள் போல் குத்துகிறது. கொலை, கொள்ளை அதிகரித்து உள்ளது. இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றார்.
அப்போது அவரிடம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வைக்கும் விமர்சனம் தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "இந்த விமர்சனங்களை நல்லதாக பார்க்கிறேன். பாஜகவின் வளர்ச்சியை அவர்கள் ரசிக்க விரும்பவில்லை. யாராக இருந்தாலும் அவர்களின் கட்சி வளர வேண்டும் என்றுதானே நினைப்பார்கள். கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் கூட பாஜகவை வளர்க்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தால் அது முட்டாள் தனம். நான் பாஜகவில் இருந்து வேறு கட்சியை வளர்க்க வேண்டும் என்று நினைத்தால் நான் முட்டாள்." என்று பதில் அளித்தார்.