தமிழகம்

சென்னையில் `மட்கார்டு' இன்றி இயக்கப்படும் குப்பை லாரிகள்: மழைக் காலங்களில் கழிவுநீரை வாரி இறைப்பதால் மக்கள் அவதி

ச.கார்த்திகேயன்

சென்னை: சென்னை மாநகராட்சியில் பல்வகை பயன்பாட்டுக்காக 1,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மாநகராட்சி சார்பில் சேகரிக்கப்படும் குப்பை, கொடுங்கையூர் போன்ற குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்ல 150-க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படுகின்றன.

இந்த லாரிகள் ஓடும்போது சாலையில் உள்ள சேறு, தண்ணீர் போன்றவை பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மீது படாமல் இருப்பதற்காக லாரிகளின் சக்கரத்துக்குப் பின்புறமாகமட்கார்டு (Mudguard) பொருத்தப்படுகிறது. இது லாரியின் அடிப்படை வடிவமைப்பிலேயே இடம்பெற்றிருக்கும்.

இது லாரிகளில் கட்டாயம் இருக்க வேண்டும். இது லாரியின் பின்னால்வரும் வாகன ஓட்டிகள் மீது சாலைகளில் உள்ள ஈரமான பொருட்கள் படுவதை தடுப்பது மட்டுமல்லாது, ஈரமான பொருட்களால் அந்த லாரி துருப்பிடித்து அழிவதையும் தடுத்து பராமரிப்பு செலவைக் குறைக்கிறது.

ஆனால், மாநகராட்சியின் பெரும்பாலான லாரிகள் மட்கார்டு இன்றியே இயக்கப்படுகின்றன. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் மழை பெய்தபோதும், சாலையில் உள்ள கழிவுகள் கலந்த மழைநீர் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மீது வாரி இறைக்கப்பட்டு, அவர்களை அசுத்தமாக்கியது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறியதாவது:

அலட்சியப் போக்கு.. லாரிகள் மட்கார்டு இல்லாமல் இருப்பதும், அதனால் மக்கள் பாதிக்கப்படுவதும் கள அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அதை வாங்கி பொருத்த நடவடிக்கை எடுக்காமல், அலட்சியப் போக்குடன் இருந்து வருகின்றனர்.

உயரதிகாரிகள் மற்றும் மேயருக்கு போதிய அனுபவம் இல்லாததால், அவர்கள் ஆய்வு என்ற பெயரில் வந்து பார்த்தாலும், இந்த குறையைக் கண்டறிவதில்லை.

முக்கியப் பணிக்கோ, சுப நிகழ்ச்சிகளுக்கோ செல்லும்போது, இந்த லாரிகளால் ஆடைஅசுத்தமாவதால், எங்கள் பயணத்தை ரத்து செய்து வீடு திரும்பும் நிலை உள்ளது. இதுபோன்ற லாரிகள் சென்றாலே அச்சமாக உள்ளது. மழை இல்லாத காலங்களில் புழுதி பறக்கச்செய்கிறது. எனவே மாநகராட்சியின் அனைத்து லாரிகளிலும் மட்கார்டு பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “லாரிகளில் மட்கார்டு பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

SCROLL FOR NEXT