தமிழகம்

சிவகங்கை | கண்மாயில் இறந்த மீன்களை கொட்டிய அதிகாரிகள்: துர்நாற்றம் வீசுவதாக கிராம மக்கள் புகார்

செய்திப்பிரிவு

சிவகங்கை: காளையார்கோவில் அருகே கண்மாயில் இறந்த மீன்களை அதிகாரிகள் கொட்டிவிட்டுச் சென்றதால் துர்நாற்றம் வீசுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

காளையார்கோவில் அருகே மேலமருங்கூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமத்தில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கண்மாய் உள்ளது. இக்கண்மாயை அப்பகுதி மக்கள் குளிப்பது உள்ளிட்ட முக்கியத் தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கண்மாய் முழுவதும் தாமரைச் கொடிகள் வளர்ந்திருந்தன. இதையடுத்து தாமரைச் செடிகளை அகற்ற பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர். கிராம மக்களே தாமரைச் செடிகளை அகற்றிக் கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து கிராம மக்களே கண்மாயைச் சுத்தம் செய்தனர். அப்போது சிலர் மீன்களைப் பிடித்தனர். இதையறிந்த வருவாய்த் துறை அதிகாரிகள் கிராம மக்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை பறிமுதல் செய்து கண்மாய்க்குள்ளே கொட்டிவிட்டுச் சென்றனர். இறந்த மீன்களை கண்மாய்க்குள் கொட்டியதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் இப்பகுதியில்தான் பள்ளி, அங்கன்வாடி மையம் உள்ளது. இதனால் குழந்தைகள் துர்நாற்றத்தால் சிரமப்படுகின்றனர். இதையடுத்து இறந்த மீன்களை அகற்ற வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT