சென்னை: "காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் நடந்தது போல எதிர்காலத்தில் இதுபோன்ற கோர விபத்துகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்துச் செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்குத் தரமான சிகிச்சையும், பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணமும் உடனடியாக வழங்க வேண்டும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற கோர விபத்துக்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டுமென்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், ஓரிக்கை கிராமப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் சேமிப்புக் கிடங்கில் புதன்கிழமை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் பூபதி (57), முருகன் (40), சசிகலா (35), தேவி (32), சுதர்சன் (31), வித்யா (30) மற்றும் அடையாளம் காணமுடியாத மூன்று பேர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், கடும் காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.