ஓசூர்: ஓசூர் உள்வட்ட சாலை பகுதியில் உள்ள, ‘முனீஸ்வர் சர்க்கிள்’ பெயர் மாற்றத்துக்கு ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில், அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஓசூர் மாநகராட்சி கூட்டம் மேயர் சத்யா தலைமையில் நடந்தது. ஆணையர் சினேகா, துணை மேயர் ஆனந்தைய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வருவாய் மற்றும் மூலதன நிதி, குடிநீர் மற்றும் வடிகால் நிதி மற்றும் ஆரம்பக்கல்வி நிதி மீதான 2022-23-ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, 106 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அதன் மீதான விவாதம் நடந்தது.
கூட்டத்தில் பேசிய மாமன்ற உறுப்பினர்கள் பலர், “தெருவிளக்கு, கழிவு நீர் கால்வாய், ஏரிகளில் ஆகாயத் தாமரை ஆக்கிரமிப்பு, குடிநீர், கழிப்பறை, சிமென்ட் சாலை அமைத்தல், போக்குவரத்து நெரிசலைச் சரி செய்ய வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.
மேலும், கூடுதல் போலீஸாரை நியமித்து ஓசூர் பகுதியில் கஞ்சா விற்பனையைத் தடுக்க வேண்டும். ஓசூரில் காவல் துறை ஆணையர் அலுவலகம் கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதற்கு மேயர் பதில் அளித்தபோது, “மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 45 வார்டுகளில் புதிய தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்” என்றார்.
தொடர்ந்து, ‘ஓசூர் உள்வட்ட சாலை பகுதியில் உள்ள முனீஸ்வர் சர்க்கிளுக்கு, தந்தை பெரியார் பெயர் சூட்டும்’ 87-வது தீர்மானத்துக்கு அதிமுக மற்றும் பாஜக மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், சிறிது நேரம் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர் களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இத்தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 25-வது வார்டு சுயேச்சை உறுப்பினர் மல்லிகா மற்றும் 40-வது வார்டு பாஜக உறுப்பினர் பார்வதி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் திமுக உறுப்பினர்களின் ஆதரவோடு அத்தீர்மானம் நிறைவேறியது.