தமிழகம்

இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் போட்டி: சேப்பாக்கத்தில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு

செய்திப்பிரிவு

சென்னை: இந்தியா-ஆஸ்திரேலியா 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்றுநடைபெறுவதையொட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னைசேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இப்போட்டிக்காக சேப்பாக்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், கூடுதல் ஆணையர் பிரேம்ஆனந்த் சின்ஹா கண்காணிப்பில் சுமார் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சேப்பாக்கம் மைதானம் பகுதியில்உள்ள வாலாஜா சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை ஒட்டிய பகுதிகளில் நேற்று இரவு முதல் தீவிர சோதனையில் போலீஸார் ஈடுபட்டனர்.

மேலும், மைதானத்துக்குள்ளும் மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் மூலமும் சோதனை நடத்தப்பட்டது. அதேபோல், வீரர்கள்தங்கும் விடுதியிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போட்டியைக் காண இன்று ஏராளமான ரசிகர்கள் சேப்பாக்கம் வருவார்கள் என்பதால், அண்ணாசாலை, வாலாஜா சாலை,காமராஜர் சாலை பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இலவச சிற்றுந்து: ஒருநாள் கிரிக்கெட் போட்டியைக்காண வரும் ரசிகர்களுக்காக இலவச சிற்றுந்து வசதிக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம் வரை இலவசமாகச் சிற்றுந்து சேவை வசதி இன்று காலை 11 மணி முதல் கிரிக்கெட் போட்டி முடியும் வரை செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, நெரிசல் மிகுந்த நேரத்தில் வழங்கப்படும் மெட்ரோ ரயில் சேவை வழக்கமான நாட்களில் மாலை 5 முதல் இரவு 8 வரைஇருக்கும். இந்த சேவை இன்று மட்டும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்படவுள்ளது என்று சென்னைமெட்ரோ ரயில் நிறுவன செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT