தமிழகம்

பழநி தேவஸ்தானத்தில் 281 பணியிடங்களுக்கு இதுவரை 15,000+ விண்ணப்பங்கள் - மூட்டை மூட்டையாக டெலிவரி!

ஆ.நல்லசிவன்

பழநி: பழநி தேவஸ்தானத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இதுவரை 15,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தினமும் தபாலில் மூட்டை மூட்டையாக விண்ணப்பங்கள் வந்து குவிகின்றன.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காலியாக உள்ள தட்டச்சர், நூலகர், அலுவலக உதவியாளர் உட்பட 281 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த மார்ச் 1-ம் தேதி அறிவிப்பு வெளியானது. வயது 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தேவஸ்தானத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அரசு வேலை கனவில் உள்ள பட்டதாரிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 15,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் பலரும் விண்ணப்பித்து வருவதால் தினமும் தபால் மற்றும் கூரியர் மூலம் விண்ணப்பங்கள் மூட்டை மூட்டையாக குவிந்து வருகின்றன. வரும் ஏப்ரல் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளதால் 50,000 விண்ணப்பம் வரை குவியும் என எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT