சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை சுகாதாரத்துறையின் ஆய்வில் உள்ளது என தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் கடந்த 2022 ஆக.23-ம் தேதி தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக வி.கே.சசிகலா,டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரிடம் மீண்டும் விசாரணை நடத்த பரிந்துரை செய்திருந்தது.
நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அடிப்படையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிடக்கோரி தினமலர் நாளிதழின் வேலூர், திருச்சி பதிப்புகளின் பதிப்பாளர் கோபால்ஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை. எனவே ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை, மரணம் குறித்த சந்தேகங்களை தீர்க்கும் வகையில் முழுமையான, நியாயமான விசாரணை நடத்த வேண்டியது அவசியம்.
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை சமர்ப்பித்து ஆறுமாதங்களுக்கு மேலாகியும், இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் உயரதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரி யிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும்நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, நீதிபதிஆறுமுகசாமி ஆணைய அறிக்கைசட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது சுகாதாரத்துறையின் ஆய்வில் உள்ளது. மருத்துவ கவனக்குறைவு இருப்பதாக தெரியவந்தால் சுகாதாரத்துறை முடிவெடுக்கும் என்றார்.
அதையடுத்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசின் விளக்கத்தைப் பெற்று தெரிவிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 27-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.