தமிழகம்

“பட்ஜெட் கானல் நீர்... தாகத்தை தீர்க்காது” - இபிஎஸ் விமர்சனம்

செய்திப்பிரிவு

சென்னை: கானல் நீர் போன்ற இந்த பட்ஜெட்,மக்களின் தாகத்தை தீர்க்காது. பட்ஜெட்டில் வெற்று அறிவிப்புகள் மட்டுமே உள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

சட்டப்பேரவையில் இருந்து நேற்று அதிமுக எம்எல்ஏ.க்கள்வெளிநடப்பு செய்தனர். பின்னர்எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈரோடு தொகுதியில் வாக்காளர்களை ஆடு, மாடுகளைப் போல அடைத்து வைத்து, வாக்களிக்கச் செய்தது ஜனநாயக படுகொலை ஆகும். தமிழகத்தில் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. பால் விலை, மின் கட்டணம், சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது.

அதிமுகவினர் மீது தொடர்ந்துபொய் வழக்குகள் போடப்படுகின்றன. இதுபோன்ற மக்கள் விரோத போக்குக்காக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம்.

நெய்வேலி நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்துக்கு நிலங்களை கையகப்படுத்துவதற்கு விவசாயிகளிடம் அனுமதி பெறாதது கண்டிக்கத்தக்கது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகைவழங்காமல் அரசு ஏமாற்றி வரு கிறது.

பத்திரப்பதிவு, ஜிஎஸ்டி வரி,கலால் வரி, சாலை வரி, பெட்ரோல்,டீசல் உள்ளிட்டவை மூலமாக அரசுக்கு வருவாய் உயர்ந்துள்ளது. அதனால் இந்த பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை பூஜ்ஜியமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், வருவாய் பற்றாக்குறை ரூ.30 ஆயிரம் கோடியாக உள்ளது. அரசு ரூ.2லட்சத்து 40 ஆயிரம் கோடி கடன்வாங்கியுள்ளது. புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளது. தினந்தோறும் கொலை, கொள்ளை, வழிப்பறிப்பு என குற்றச் செயல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகின்றனர்.

தமிழகத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுகஅறிவித்தது. இப்போது, தகுதி அடிப்படையில் உரிமைத் தொகைவழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

எந்த அடிப்படையில் தகுதியான குடும்பத் தலைவிகளை தேர்ந்தெடுப்பீர்கள்? ரூ.7 ஆயிரம் கோடியில், எவ்வளவு பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்க முடியும் என்று தெரியவில்லை.

கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், 1,000 புதிய பேருந்துகள், 500 மினி பேருந்துகள் கொள்முதல்செய்யப்படும் என தெரிவித்தார்கள். ஆனால், தற்போது அறிவித்த பட்ஜெட்டில் அதற்கான நிதியை ஒதுக்கவில்லை.

மின்மினி பூச்சி போன்ற இந்தபட்ஜெட் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கு வெளிச்சம் தராது. கானல் நீர் போன்ற இந்த பட்ஜெட், மக்களின்தாகத்தை தீர்க்காது. பட்ஜெட்டில் வெற்று அறிவிப்புகள் மட்டுமே உள்ளன. இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. இவ்வாறு பழனிசாமி கூறினார்.

SCROLL FOR NEXT