அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டு்ம் திட்டத்தில், கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள நீரேற்று நிலையத்துக்கு தண்ணீர் வந்தபோது, அதை மலர்தூவி வரவேற்ற விவசாயிகள், பொதுமக்கள். 
தமிழகம்

அத்திக்கடவு - அவிநாசி திட்ட நீர் அன்னூர் நீரேற்று நிலையத்துக்கு வந்தது: மலர் தூவி வரவேற்ற விவசாயிகள், பொதுமக்கள்

செய்திப்பிரிவு

கோவை: அன்னூர் நீரேற்று நிலையத்துக்கு வந்த வந்த அத்திக்கடவு -அவிநாசி திட்ட நீரை மலர் தூவி விவசாயிகள், பொதுமக்கள் வரவேற்றனர்.

கொங்கு மண்டலத்தின் முக்கிய மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிக்கு கீழே சென்று விட்டது. இதனால் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாக மாறின. இதற்கு தீர்வாக, பவானி ஆற்று உபரி நீரை பயன்படுத்தி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 1,045 குளம், குட்டைகளை நிரப்ப ரூ.1,657 கோடி மதிப்பில் அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டப்பணி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

பின்னர், இத்திட்டப்பணிக்காக கடந்த 2021-ல் ரூ.90 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. மொத்தம் ரூ.1,747 கோடி மொத்த மதிப்பீட்டில் திட்டப்பணிகள் வேகப்படுத்தப்பட்டன. தற்போது 98 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.

945 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரதான குழாய்களும், கிளைக் குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளன. இதில் 1,045 குளம், குட்டைகளுக்கு ஆண்டுக்கு 1.5 டிஎம்சி தண்ணீர் நிரப்பப்பட உள்ளது. இதில் கடந்த ஒரு மாதமாக 5 நீரேற்று நிலையங்களில் வெள்ளோட்டம் விடப்பட்டது.

ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் அணைக்கட்டில் தொடங்கி 4 நீரேற்று நிலையங்களை கடந்து, ஈரோடு மாவட்டம், வரப்பாளையம், அந்தியூர் ஒன்றியத்தில்- எம்மாம்பூண்டியில் உள்ள 5-வது நீரேற்ற நிலையத்திலிருந்து, கோவை மாவட்டம், அன்னூரில் அமைந்துள்ள ஆறாவது நீரேற்று நிலையத்துக்கு நீர் வந்து சேர்ந்தது. நேற்று முன்தினம் மதியம் 1.45 மணிக்கு நீர் வந்தவுடன் விவசாயிகள், பொதுமக்கள் ஏராளமானோர் நீரேற்று நிலையம் முன்பு குவிந்து, நில மட்டத் தொட்டியில் மலர்களைதூவி வரவேற்றனர். நில மட்டத் தொட்டி நிறைந்து தண்ணீர் அருகில் உள்ள குன்னத் தூராம்பாளையம் குளத்துக்குச் சென்றது.

SCROLL FOR NEXT