தமிழகம்

அடையாறு ஆற்றங்கரையை அழகுபடுத்த தனியார் பங்களிப்புடன் ரூ.1,500 கோடியில் திட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: அடையாறு ஆற்றங்கரையை அலங்கரிக்கும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரூ.1,500 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: சிங்கார சென்னையை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, 44 கி.மீ. நீளமுள்ள அடையாறு ஆற்றில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல் போன்ற தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், பூங்காக்கள், பசுமை நடைபாதைகள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள், தரமான அருந்தகங்கள் போன்ற கண்கவர் பொழுதுபோக்கு அம்சங்களுடன் அடையாறு ஆற்றங்கரை அலங்கரிக்கும் திட்டம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ.1,500 கோடியில் செயல்படுத்தப்படும்.

சென்னை தீவுத் திடலில் 30 ஏக்கர் பரப்பில் இயற்கை வனப்புடன் நகர்ப்புற பொது சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரை அரங்கம், உணவகங்கள் போன்ற நவீன நகர்புற வசதிகளை ரூ.50 கோடியில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்தும்.

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள மறு குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த விளையாட்டு பொழுதுபோக்கு மையங்கள் உருவாக்கப்படும். இந்த மையங்களில் விளையாட்டு வசதிகள், நவீன உடற்பயிற்சி கூடம் தொழிற் பயிற்சி வழங்க பல்நோக்கு சமுதாயக் கூடங்கள், நூலகம் போன்ற வசதிகள் அமைக்கப்படும்.

வரும் ஆண்டில் ரூ.20 கோடியில் கண்ணகி நகர், பெரும்பாக்கம், நாவலூர், அத்திப்பட்டு ஆகிய 4 இடங்களில் இந்த மையங்கள் உருவாக்கப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT