சென்னை: திருநீர்மலை நைனா ஏரியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளை இரு வாரங்களில் அகற்ற தாம்பரம் மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான உதயக்குமார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட திருநீர்மலை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு முக்கியகுடிநீர் ஆதாரமாக நைனா ஏரிஉள்ளது. இந்த ஏரியை தனியார் தொழிற்சாலைகள் ஆக்கிரமித்து கட்டுமானங்களை எழுப்பியுள்ளன. கட்டுமானக் கழிவுகளை ஏரியில் கொட்டுவதால் ஏரியின் நீர் ஆதாரமும் பாழாகி வருகிறது.
தற்போது அனுமதியின்றி மருத்துவக் கழிவுகளும் இந்த ஏரியில் கொட்டப்படுவதால் குடிநீர் மாசடைந்து, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பொதுமக்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக தமிழகஅரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், தாம்பரம் மாநகராட்சி ஆகியவற்றிடம் புகார் அளித்தும்எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதையடுத்து நீதிபதிகள், அந்த ஏரியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளையும், தொழிற்சாலை கழிவுகளையும் இரு வாரங்களில் அகற்ற வேண்டும் என தாம்பரம் மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.
அறிக்கை தர உத்தரவு: மேலும் குடிநீர் ஆதாரமாக உள்ள ஏரியில் மருத்துவ மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளைக் கொட்டுபவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். அத்துடன் மருத்துவக் கழிவுகளை அகற்றியது தொடர்பாக விரிவான அறிக்கையை மாசு கட்டுப்பாட்டு வாரியமும், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகமும் தாக்கல் செய்ய வேண்டும், என அறிவுறுத்தி விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.