சென்னை: உரிய தகுதியின்றி மாற்றுமுறை மருத்துவத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி-க்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என டிஜிபி-க்கு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அக்குபஞ்சர், எலெக்ட்ரோபதி, யோகா போன்ற மாற்றுமுறை மருத்துவத்தில் ஈடுபடும் தங்களது தொழில் உரிமையில் தலையிடக் கூடாது என போலீஸாருக்கு தடை விதிக்கக் கோரி, மாற்றுமுறை மருத்துவ தொழில் புரிந்துவரும் செல்வகுமார், சண்முகம் உள்ளிட்ட 61 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தனர்.
‘எங்களது மருத்துவ சேவையை அங்கீகரிக்கக் கோரி அரசுக்கு மனு அளித்துள்ளோம். சமூக சேவைக்கான மருத்துவப் படிப்பில் டிப்ளமோ முடித்து பொதுமக்களுக்கு சேவை புரிந்துவரும் எங்களின் பணியிலும், உரிமையிலும் போலீஸார் அடிக்கடி தலையிட்டு வருகின்றனர்’ என அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
6 மாத டிப்ளமோ படிப்பு: இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், ‘‘மாற்றுமுறை மருத்துவத் தொழில் புரிய மனுதாரர்கள் தகுதிபெறவில்லை. அவர்கள் பெற்றுள்ளதாக கூறப்படும் 6 மாத டிப்ளமோ படிப்பு என்பது அங்கீகரிக்கப்பட்டதல்ல. தகுதிபெறாத இவர்களை மருத்துவம் செய்ய அனுமதிப்பது என்பது பேராபத்தை விளைவித்து விடும்’’ என விளக்கம் அளிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: நாட்டில் மாற்றுமுறை மருத்துவம் நடைமுறையில் உள்ள போதிலும், தகுதி பெறாதவர்கள் மாற்று முறை மருத்துவம் செய்ய எந்த உரிமையும் கோர முடியாது. 6 மாத டிப்ளமோ படிப்பை வழங்கும் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களுக்கு எதிராகவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உரிய சான்றிதழ் இல்லை: மனுதாரர்கள் சட்டப்படி செல்லுபடியாகும் சான்றிதழ்களை பெற்றிருக்கவில்லை. அவர்கள் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிலும் பதிவு செய்யவில்லை என்பதால் மாற்றுமுறை மருத்துவம் செய்ய அவர்களுக்கு அனுமதி அளிக்க முடியாது.
முறையாக பதிவு செய்யப்படாத, அங்கீகரிக்கப்படாத நபர்கள் மாற்றுமுறை மருத்துவத்தில் ஈடுபட்டுள்ளனரா என்பதை அடிக்கடி ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட எஸ்பி-க்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
அதேபோல, இந்த வழக்கை தொடர்ந்துள்ள மனுதாரர்கள் மாற்றுமுறை மருத்துவத்தில் ஈடுபடவில்லை என்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.