சென்னை: சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மூலம், சென்னையில் ஓர் சர்வதேச அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்து, நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் பேசியதாவது: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மூலம், சென்னையில் ஓர் சர்வதேச அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்கப்படும்.
இது விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதுடன், முன்னணி விளையாட்டுப் போட்டிகளின் முனையமாக அமையும். இதற்கு பன்னாட்டு வல்லுநர்களை கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
மேலும், ரூ.25 கோடி மதிப்பீட்டில் நவீன விளையாட்டு வசதிகளுடன் சென்னை ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கம் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.1,763 கோடி மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகக்கூடிய தடையற்ற கட்டமைப்புகளை அமைத்து, தொழில் பயிற்சி மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம் ஒன்றை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
இத்திட்டம், 2023-24-ம் ஆண்டில் 15 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். மேலும், உடல் குறைபாடு மதிப்பீட்டுச் சான்றளித்தல், ஆரம்ப நிலை சிகிச்சை போன்ற சேவைகளை கோட்ட அளவிலேயே வழங்க 39 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்படும்.
மேலும், வீட்டிலேயே சிகிச்சை அளிப்பதற்காகவும், பல்வேறு நலத் திட்டங்களில் சலுகைகளைப் பெற உதவுவதற்காகவும் தன்னார்வலர்களை கொண்ட 150 அண்மை மையங்கள் அமைக்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் மற்றும் பராமரிப்புத் தொகைக்காக பட்ஜெட்டில் ரூ.1,444கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.