புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துக்கு உட்பட்ட ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில், குடிநீர் வசதி இல்லாததால் கர்ப்பிணிகள், தாய்மார்கள் உள்ளிட்டோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
புதுக்கோட்டையில் இருந்து 7 கி.மீ தொலைவில் முள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்தக் கல்லூரி நிர்வாகத்துக்கு உட்பட்ட மகப்பேறு சிகிச்சைப் பிரிவு, புதுக்கோட்டை நகரில் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு மாதத்துக்கு சராசரியாக 800 குழந்தைகள் வரை பிறக்கின்றன.
புற நோயாளிகள் பிரிவு தனிக் கட்டிடத்திலும், உள் நோயாளிகள் பிரிவு தனி அடுக்குமாடிக் கட்டிடத்திலும் இயங்கி வருகின்றன. இந்த மருத்துவமனை வளாகத்தில் குடிநீர் மற்றும் கர்ப்பிணிகள், தாய்மார்கள் ஆகியோருக்கு வெந்நீர் ஆகிய வசதிகள் இல்லை. இதனால், குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளதாகவும், வெந்நீர் கோரி அருகேயுள்ள டீ கடை, ஹோட்டல்களில் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து இந்திய மாதர் தேசிய சம்மேளன மாவட்டச் செயலாளர் இந்திராணி கூறியது: பிரசவம் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 100-க்கும் அதிகமானோர் தங்கவைக்கப்படுகின்றனர். ஆனால், இந்த வளாகத்தில் குடிநீர் வசதி இல்லை.
பாட்டில் குடிநீரை கேண்டீன்களில் வாங்கிச் சென்றால், மருத்துவமனைக்குள் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி அவற்றை காவலாளிகள் அனுமதிப்பதில்லை. இதனால், பாட்டிலில் உள்ள குடிநீரை, சில்வர் பாத்திரத்தில் ஊற்றிக் கொண்டு மருத்துவமனைக்குள் செல்ல வேண்டியுள்ளது.
இதேபோல, பிரசவித்த தாய்மார்களுக்கு வெந்நீர் தேவைப்படும் நிலையில், மருத்துவமனை வளாகத்தில் இலவச வெந்நீர் பெறும் வசதி இல்லை. இதன் காரணமாக மருத்துவமனைக்கு அருகேயுள்ள டீ கடை, ஹோட்டல்களில் பாத்திரங்களுடன் பெண்கள் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். பல நேரங்களில் கடைக்காரர்கள் முகம் சுழிப்பதால், வெந்நீர் கேட்கச் செல்வோர் சங்கடத்துக்கு உள்ளாகின்றனர்.
மேலும், உள் நோயாளிகள் பிரிவில் கழிப்பறைகள் தினமும் சுத்தம் செய்யப்படுவதில்லை. கழிப்பறைகளில் பெரும்பாலும் தண்ணீர் வருவதில்லை. மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்ட 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு, குடிநீர் இணைப்பு கொடுக்கப்படவில்லை.
இதுபோன்ற குறைகளால் இந்த மருத்துவமனையை நம்பி வரும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இந்தக் குறைகளைச் சீரமைக்க மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து புதுக்கோட்டை எம்எல்ஏ வை.முத்துராஜா கூறியது: மருத்துவமனைக்கு நகராட்சி மூலம் தடையில்லாமல் குடிநீர் விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வெந்நீர் கிடைப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.