வாலாஜா-முசிறி வரை நேற்று இயக்கப்பட்ட அரசு பேருந்தில் ஆபத்தை உணராமல், தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர்கள். 
தமிழகம்

ராணிப்பேட்டை | பேருந்தில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்கள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை: போக்குவரத்து விதிகள் மீறி பேருந்துகளில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப் படுகின்றன. இந்நிலையில், தென்கடப்பந்தாங்கல், கடப்பந் தாங்கல் உட்பட பல்வேறு கிராமங்களின் வழித்தடங்களை இணைக்கும் வகையில் வாலாஜா- முசிறி வரை அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக பயணிகள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப் படுகிறது.

இதன் காரணமாக, வேலைக்கு செல்பவர்கள் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கு போதிய பேருந்து வசதி கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இந்த வழித்தடத்தில் உள்ள கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் போக்குவரத்து விதிகளை மீறி படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று காலை வாலாஜா-முசிறி வரை இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில் இளைஞர்கள் பேருந்தின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கம்பிகளை மட்டும் பிடித்துக்கொண்டு தொங்கியபடி பயணித்தனர். இதைப்பார்த்த, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் இருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், சில கல்லூரி மாணவர்கள் இந்த பயணத்தை வேண்டுமென்றே மேற்கொள்கின்றனர்.

மாவட்ட காவல் துறை யினர் சார்பில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், மாவட்டத்தில் பல்வேறு வழித்தடங்களில் மாணவர்களின் இதுபோன்ற பயணம் தொடர் கதையாகி வருகிறது. விபரீதங்கள் ஏற்படும் முன்பு இதுபோன்ற பயணங் களில் ஈடுபடும் மாணவர்கள் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT