தி.மலை: திருவண்ணாமலையில் தொன்மையான அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதை வணிகர்கள் வரவேற்கிறார்களா? என்ற கேள்விக்கு பதில் கூறாமல் செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து வணிகர்கள் புறப்பட்டு சென்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அருகே உள்ள அம்மணி அம்மன் மடத்தை பாஜக ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் டி.எஸ்.சங்கர் ஆக்கிரமித்துள்ளதாக கூறி, அவரது மாடி வீடு கடந்த 18-ம் தேதி இடித்து அகற்றப்பட்டது.
மேலும், தொன்மையான அம்மணி அம்மன் மடத்தை இடிக்கும் பணியை இந்து சமய அறநிலைத் துறை மேற்கொண்டது. இதற்கு, இந்து முன்னணி மற்றும் பாஜக உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், 400 ஆண்டு கள் தொன்மையான அம்மணி அம்மன் மடத்தை உச்ச நீதிமன்ற விதிகளை மீறி இடிக்கப்பட்டதாக கூறி, பாஜக வழக்கறிஞர் சங்கர் நேற்று முன் தினம் குரல் எழுப்பினார். அப்போது அவர் பேசும்போது, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர், உதவி ஆணையர் ஆகியோரை மிக கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் அமைச்சர் எ.வ.வேலு, ஆட்சியர் பா.முருகேஷூக்கு எதிராகவும், தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
பாஜக நிர்வாகிக்கு வலை: பாஜக வழக்கறிஞர் சங்கரின் விமர்சனம் குறித்து இந்து சமய அறநிலையத் துறை சார்பில், திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக, அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். வழக்கறிஞர் சங்கரின் ஆதரவாளர்கள் வீடுகள், உறவினர் வீடுகள் என பல இடங்களில் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். ஆனாலும், அவரது இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியாத நிலை தொடர்கிறது.
இதற்கிடையில், அம்மணி அம்மன் மடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது குறித்து வணிகர்கள் உள்ளிட்டோர் கருத்து தெரிவிக்க உள்ளதாக செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் தனுசு தலைமையிலான வணிகர்கள், அம்மணி அம்மன் மடம் முன்பாக செய்தியாளர்களை நேற்று மாலை சந்தித்தனர்.
அப்போது, தனுசு கூறும்போது, “அம்மணி அம்மன் மடத்தில் உள்ள ஆண்டவனுக்கு பூஜை நடைபெறவில்லை. இந்த மடம், கோயிலுக்கு சொந்தமானது என வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்படி, நீதிமன்ற உத்தரவின் பேரில், அகற்றப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு பல வசதி செய்து கொடுக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு ஆர்வமாக உள்ளார்” என்றார்.
அப்போது, “ஆண்டவன் இருந்ததாக கூறும் அம்மணி அம்மன் மடத்தின் கட்டிடம் இடிக்கப்பட்டதை வணிகர்கள் வரவேற்கிறார்களா?, நீதிமன்றம் உத்தரவு என்றால், எந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என கூற முடியுமா?, பழமையான கட்டிடம் என்றால், மடத்தின் கட்டிடம் பழமையானது என எந்த துறை ஆய்வு செய்து அறிக்கை கொடுத்துள்ளது?, இரவோடு, இரவாக மடத்தை இடிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று” செய்தியாளர்கள் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர். இதனால், செய்வதறியாமல் திகைத்து நின்றவர்கள், கோயில் அதிகாரியிடம் கேட்க வேண்டும் என கூறிவிட்டு, செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து பாதியிலேயே புறப்பட்டு சென்றனர்.