பணியாளர்கள் பற்றாக்குறையால் மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து ஆரப்பாளைத்திற்கு இயக்கப்படும் நடத்துனர் இல்லா பேருந்து. படம்: நா.தங்கரத்தினம் 
தமிழகம்

பணியாளர்கள் பற்றாக்குறையால் மதுரையில் ‘நடத்துனர் இல்லா’ பேருந்துகள்: ஆளும்கட்சி ஊழியர்கள் மீது சிஐடியு புகார்

கி.மகாராஜன்

மதுரை: மதுரையில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையால் எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து ஆரப்பாளையத்திற்கு அதிகளவில் ‘நடத்துனர் இல்லா’ பேருந்துகள் இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளன. இதில் ஆளும்கட்சி தொழிற்சங்கத்தினர் ‘ஓபி’ அடிக்காமல் வேலை பார்த்தாலே பணியாளர்கள் பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்கலாம் என சிஐடியு தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் 15 அரசு போக்குவரத்து கழக டெப்போக்கள் மூலம் 900க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஓட்டுநர், நடத்துனர் பற்றாக்குறையால் ஒரு டெப்போவுக்கு குறைந்தது 30 பேருந்துகள் இயக்கமுடியாமல் நிறுத்தப்படுகின்றன. ஓட்டுநர்களை விட 100க்கும் மேற்பட்ட நடத்துனர்கள் பற்றாக்குறை உள்ளது.

இதனால் பேருந்துகளை இயக்கமுடியாமல் டெப்போக்களில் நிறுத்தப்படுகின்றன. ஆளின்றி இயக்க முடியாமல் நிற்கும் பேருந்துகளை ‘நடத்துனர் இல்லா’ பேருந்து என இயக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து ஆரப்பாளைத்திற்கு அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது பயணிகளுக்கும், ஓட்டுநருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதனால் ஒவ்வொரு டெப்போக்களிலும் ஆளும்கட்சி தொழிற்சங்கத்தினர் ‘ஓடி’ ஆக இருப்போர் வேலை பார்த்தாலே இந்நிலை ஏற்படாது என சிஐடியு தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து சிஐடியு மதுரை மண்டல பொதுச்செயலாளர் கனகசுந்தர் கூறியதாவது: அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனர் பற்றாக்குறை உள்ளதால் ‘நடத்துனர் இல்லா’ பேருந்துகளை இயக்குகின்றனர். பேருந்தில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் ஓட்டுநர் பாதிக்கப்படுவார். பயணிகளுக்கும் பாதுகாப்பில்லை. ஆளும்கட்சி தொழிற்சங்கத்தினர் ஓட்டுநர், நடத்துனர் பணியை பார்க்காமல், மற்ற வேலைகளில் ஈடுபடுவதால் இதுபோன்ற நிலை ஏற்படுகிறது.

மேலும் தொடர் வேலைப்பளு காரணமாக நோய்வாய்ப்படும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் விடுப்பு எடுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும் உடல்நிலை சரியில்லாமல் விடுப்பு எடுக்க வேண்டுமென்றால், கூடுதலாக வேலை பார்த்தால்தான் விடுப்பு வழங்கும் நிலை உள்ளது. இதனை நிர்வாகம் கைவிட வேண்டும்: என்றார்.

SCROLL FOR NEXT