சென்னை: கோயில் நிலங்களின் புவிசார் ஒருங்கிணைப்புகளை பதிவு செய்யவும், நில வளங்கள் பற்றிய தரவுத்தளத்தை தயாரிப்பதற்கும் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, 1,08,000 ஏக்கரில் இப்பணிகள் நிறைவடைந்துள்ளன என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை மற்றும் மக்கள் குறைதீர்ப்பு தொடர்பான திட்டங்களையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டு விவரங்களையும் அவர் அறிவித்தார். அதன் விவரம்: கோயில் சொத்துகளைப் பாதுகாப்பதற்கு அரசு தீவிர முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, 4,491 ஏக்கர் பரப்பளவில் ஆக்கிரமிப்பு
செய்யப்பட்ட 4,236 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் சொத்துக்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
> கோயில் நிலங்களின் புவிசார் ஒருங்கிணைப்புகளை பதிவு செய்யவும், நில வளங்கள் பற்றிய தரவுத்தளத்தை தயாரிப்பதற்கும் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, 1,08,000 ஏக்கரில் இப்பணிகள் நிறைவடைந்துள்ளன.
> நடப்பாண்டில், 574 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, குடமுழுக்குகள் நடத்தப்பட்டன. திருச்செந்தூர் கோயிலில் 305 கோடி ரூபாயிலும், பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் 166 கோடி ரூபாயிலும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 146 கோடி ரூபாய் செலவிலும் பெருந்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் நிதியாண்டில், 400 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்படும். வரும் ஆண்டில், பழனி, திருத்தணி, சமயபுரம் ஆகிய கோயில்களில் பெருந்திட்டப் பணிகள் 485 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.
மக்கள் குறைதீர்ப்பு > பொது மக்களின் குறைகளை விரைவாகவும், நிறைவாகவும் தீர்ப்பதற்கு இந்த அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த ஆண்டு முதல்வரின் முகவரித் திட்டத்தில், பெறப்பட்ட 17.7 லட்சம் மனுக்களில், 17.3 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. தீர்வு காணப்பட்ட மனுக்களின் மீது மனுதாரர்களிடமிருந்து பின்னூட்டங்கள் பெறப்பட்டு தரக்கண்காணிப்புப் பிரிவால் மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
> அரசு அலுவலகங்களை மக்கள் தேடி வரும் நிலையை மாற்றி, அவர்கள் இருப்பிடத்திற்கே நிருவாகத்தை கொண்டு செல்வதே இந்த அரசின் குறிக்கோளாகும். ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற இந்த அரசின் புதிய திட்டத்தில், தமிழக முதல்வர் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று, களஆய்வு மேற்கொள்கின்றார். இதன் அடுத்தகட்டமாக, அரசின் திட்டங்களையும் சேவைகளையும் கடைக்கோடி மக்களும் பெற்றுப் பயனடையும் வகையில் அனைத்து ஊராட்சிகளிலும், நகர்ப்புரப் பகுதிகளிலும் ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில், அனைத்து அரசுத்துறைகளையும் ஒருங்கிணைத்து அரசு சேவை முகாம்கள் நடத்தப்படும். ஒட்டுமொத்த அரசு நிருவாக இயந்திரமும், மக்களை தேடிச் சென்று, அவர்களுக்குத் தேவையான சேவைகளை அளிப்பதற்கு இத்திட்டம் வழிவகை செய்யும். | வாசிக்க > தமிழ்நாடு பட்ஜெட் 2023 சிறப்பு அம்சங்கள்