சென்னை: சமூக ஊடகங்கள் வாயிலாக தவறான காணொலிகளைப் பரப்பி புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே ஏற்பட்ட அச்சத்தைப் போக்க சுமார் 4 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை மாவட்ட நிருவாகமும், காவல்துறை அலுவலர்களும் நேரில் சந்தித்து உண்மையை விளக்கினர் என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது காவல் துறை மற்றும் அரசு பணியாளர்கள் நலன் தொடர்பான திட்டங்களையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டு விவரங்களையும் அவர் அறிவித்தார். அதன் விவரம்: சட்டம் - ஒழுங்கை இந்த அரசு திறம்பட நிலைநாட்டியதன் காரணமாக, தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகவும், சமுதாய நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது.
> போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலைத் தடுப்பதற்கு, அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நடவடிக்கைகளால், 13,491 போதைப் பொருள் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுடைய வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
> நிருவாகத்தில் வெளிப்படைத் தன்மையை மேலும் அதிகரிக்க, மாநிலம் முழுவதிலுமுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 38.25 கோடி ரூபாய் மொத்தச் செலவில் கண்காணிப்புக் கேமரா அமைப்பு மேம்படுத்தப்படும்.
> சமூக ஊடகங்கள் வாயிலாக தவறான காணொலிகளைப் பரப்பி புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே அச்சத்தை உருவாக்க, அண்மையில் சமூக விரோதிகள் சிலரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அரசின் விரைவான, கடுமையான நடவடிக்கைகளால் ஒடுக்கப்பட்டுள்ளன. இச்செயல்களில் ஈடுபட்ட சமூகவிரோதிகள் மீது 11 வழக்குகள் பதியப்பட்டு, கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரசின் இந்த உறுதியான நடவடிக்கை அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. சுமார் 4 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை மாவட்ட நிருவாகமும், காவல்துறை அலுவலர்களும் நேரில் சந்தித்து உண்மையை விளக்கினர். வெளி மாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிவதற்கான பாதுகாப்பான பணிச்சூழலை எடுத்துரைத்து அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் அனைத்து முயற்சிகளையும் பீகார், ஜார்கண்ட் மாநில அரசுகளுடன் இணைந்து அரசு மேற்கொண்டு வருகிறது.
அரசுப் பணியாளர் நலன் > அரசுப் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்களின் நலனைப் பாதுகாப்பதில் இந்த அரசு கண்ணும் கருத்துமாக உள்ளது. பழைய அரசு அலுவலர் குடியிருப்புகள் படிப்படியாக புதிதாகக் கட்டப்படும். வரும் நிதியாண்டில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும். உயர்ந்து வரும் கட்டுமானச் செலவுகளைக் கருத்திற்கொண்டு, அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் வீடுகட்டும் முன்பணம் 40 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாயாக வரும் நிதியாண்டிலிருந்து உயர்த்தப்படும்.
> ஓய்வூதியதாரர் இறக்க நேரிட்டால், குடும்ப உறுப்பினர்களுக்கு ‘தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களின் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டத்தில்’ நிதியுதவியாக 50,000 ரூபாய் வழங்கப்படுகிறது. கரோனா பெருந்தொற்றுக் காலத்திற்குப் பின்னர், இந்நிதியுதவிக்கான கோரிக்கைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஓய்வூதியர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு 2021-22 ஆம் ஆண்டில் 25 கோடி ரூபாயும், 2022-23 ஆம் ஆண்டில் 50 கோடி ரூபாயும் சிறப்பு நிதியாக இந்த அரசு வழங்கியுள்ளது.
நிலுவையிலுள்ள விண்ணப்பங்களை தீர்வு செய்ய மேலும் 25 கோடி ரூபாய் சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. கரோனா பெருந்தொற்றின்போது உயிரிழந்த 401 முன்களப் பணியாளர்கள் குடும்பத்தினருக்கு, தலா 25 லட்சம் ரூபாய் வீதம் 100 கோடி ரூபாய் கருணைத்தொகை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. | வாசிக்க > தமிழ்நாடு பட்ஜெட் 2023 சிறப்பு அம்சங்கள்