தமிழகம்

விருதுநகர் | ஆனைக்குட்டம் அணை ரூ.49 கோடியில் புனரமைப்பு: பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என அதிகாரி தகவல்

இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகர் நகராட்சியின் குடிநீர் ஆதாரமாகத் திகழும் ஆனைக்குட்டம் அணையில் ரூ.49 கோடியில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

விருதுநகர் நகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவது ஆனைக்குட்டம் நீர்த்தேக்கம். இதன் முழுக் கொள்ளளவு 125.152 மில்லியன் கன அடி. அணையின் உயரம் 7.50. மீட்டர். முழுநீளம் 2,940 மீட்டராகும். இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் ஆனைக்குட்டம் கீழ திருத்தங்கல், வாடி, முத்துலிங்காபுரம் ஆகிய கிராமங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகின்றன.

விருதுநகர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளிலும் உள்ள பொதுமக்களுக்கு ஆனைக்குட்டம் அணையிலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் பற்றாக்குறையைப் போக்க தற்போது தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலமாகவும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நீர்த்தேக்கத்தில் கரையை பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கடந்த 2016ம் ஆண்டு ரூ.4.26 கோடியில் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், ஆனைக்குட்டம் அணையில் முழு அளவில் நீரை தேக்கிவைக்க முடியாத தாலும், ஷட்டர் பழுதானதாலும் போதிய அளவு குடிநீர் எடுக்க முடியவில்லை. மேலும், அணையில் உள்ள குடிநீர் எடுக்கும் கிணறுகளிலும் தண்ணீர் உவர் நீராக மாறியுள்ளது. இதனால், அணையில் மீண்டும் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆனைக்குட்டம் அணையில் ரூ.49 கோடியில் மதகு பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகையில், ரூ.49 கோடியில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அடுத்த மாதத்தில் இப்பணிகள் தொடங்கப்படும், என தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT