தொழிலதிபர் தோரணையில் பந்தா வாக வலம் வந்து 8 ஆண்டுகளாக திருட்டுத் தொழில் செய்தவர் வழிப்பறி சம்பவத்தில் சிக்கினார்.
சென்னை ராமாவரம் வெங்கடேஸ்வரா நகர் 20-வது குறுக்கு தெருவில் வசிப்பவர் வினோத்(27). கடந்த 12-ம் தேதி இரவு பணி முடிந்து வீட்டுக்கு நடந்து வரும் வழியில், பைக்கில் வந்த ஒருவர் அவரை வழிமறித்தார். கத்தியைக் காட்டி மிரட்டி, வினோத்திடம் இருந்த செல்போன், ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றார்.
பைக் எண்ணை கவனித்த வினோத், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். விசாரணை நடத்திய போலீஸார், பாடி டிவிஎஸ் நகர் 4-வது தெருவில் வசிக்கும் பிரதீஷ் புவன்(28) என்பவரைப் பிடித்தனர். மிகவும் டிப்டாப்பாக, ஸ்டைலாக, தொழிலதிபர் தோரணையில் இருந்த அவர் மீது போலீஸாருக்கு சிறிதுகூட சந்தேகம் ஏற்படவில்லை. ஒருவேளை, பைக் எண்ணை வினோத் தவறாக கூறியிருக்கலாம் என்று கருதினர்.
சம்பவம் தொடர்பாக பிரதீஷிடம் சிறிது விசாரித்ததில், முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார். அவர் தான் வழிப்பறி செய்தவர் என்று வினோத்தும் அடையாளம் காட்டினார். இதையடுத்து, விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்தினர். இதில் தெரியவந்த பரபரப்பு தகவல்கள் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
20 வயதிலேயே திருடக் கற்றுக் கொண்ட பிரதீஷ் ஒரு சம்பவத் தில்கூட பிடிபட்டதில்லை. இதனால் திருட்டையே தொழிலாக மாற்றிக் கொண்டார். பூட்டியிருக்கும் வசதியான வீடுகளை குறிவைத்து சரியாக திட்டம் போட்டு திருடியிருக்கிறார். இதில் லட்சக்கணக்கில் பணம், நகைகள் கிடைத்துள்ளன. நகைகளை 4 அடகுக் கடைகளில் மாற்றி மாற்றி விற்று வந்துள்ளார்.
திருடிக் கிடைத்த பணத்தை வைத்து பாடியில் தன் தந்தைக்கு ஒரு ஃப்ளாட் வாங்கிக் கொடுத்தார். ஓர் ஆண்டுக்கு முன்புதான் பிரதீஷுக்கு திருமணம் நடந்துள்ளது. மிக ஆடம்பரமாக திருமணத்தை நடத்தி உறவினர்கள், அக்கம்பக்கத்தினரை வியக்க வைத்துள்ளார். கம்ப்யூட்டர் பொருட்கள் விற்பதாகக் கூறி மனைவி, குடும்பத்தினரை ஏமாற்றி, ஒரு தொழிலதிபர் போர்வையிலேயே வலம் வந்திருக்கிறார்.
இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து, அவரது வீடு மற்றும் அடகு கடைகளில் போலீஸார் சோதனை நடத்தினர். 125 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருட் கள், 21 லேப்டாப்கள், ரூ.50 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
வளசரவாக்கம், ராமாபுரம், ராயலா நகர், தி.நகர், கோயம்பேடு, நந்தம்பாக்கம், கொரட்டூர், படூர், கேளம்பாக்கம், காட்டாங்கொளத்தூர், மதுரவாயல், போரூர் உள்பட பல இடங்களிலும் பல வீடுகளில் பிரதீஷ் திருடியுள்ளார். அத்தனை திருட்டுகளையும் இவர் தனியாக செய்தாரா? கூட்டாளிகள் யாராவது உள்ளனரா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.