தூத்துக்குடி: தமிழகத்தில் பனைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாவட்டம் தூத்துக்குடி. இம்மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளம், உடன்குடி, குளத்தூர், விளாத்திகுளம் பகுதிகளில் பனைத் தொழில் பிரதானமாக உள்ளது. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனைத் தொழிலாளர்கள் உள்ளனர்.
ஆண்டுதோறும் மாசி மாதம் முதல் ஆடி மாதம் வரை, அதாவது பிப்ரவரி மாதம் 15-ம் தேதிக்கு மேல் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி வரை பதநீர் சீசனாகும். இந்த ஆண்டும் வழக்கம் போல் பதநீர் சீசன் தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போன நிலையிலும், பதநீர் உற்பத்தியில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. பதநீர் உற்பத்தி நன்றாக இருப்பதால் பனைத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கருப்பட்டி விலை உயர்வு: இதுகுறித்து தமிழ்நாடு பனைத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் எம்.ராயப்பன் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் பதநீர் சீசன் ஒரு மாதத்துக்கு முன்பே தொடங்கிவிட்டது. தற்போது பதநீர் உற்பத்தி அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு பதநீர் உற்பத்தி நன்றாக இருக்கிறது. ஒரு தொழிலாளி சராசரியாக 10 பனை ஏறுகிறார். அதில் தலா 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 டின் பதநீர் கிடைக்கிறது.
பதநீர் ஒரு லிட்டர் ரூ.90 என்ற விலையில் விற்கப்படுகிறது. அதுபோல கருப்பட்டி விலையும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 10 கிலோ கருப்பட்டி ரூ.1,000 என்ற விலைக்கு தான் வியாபாரிகள் எடுத்தனர். தற்போது ரூ.2,000 வரை எடுக்கின்றனர். சில்லரை விற்பனையில் கிலோ ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது.
பனை ஏறும் இயந்திரம்: பனைத் தொழில் தற்போது சரிவில் இருந்து கொஞ்சம் மீண்டு வருகிறது. பல கிராமங்களில் பட்டதாரி இளைஞர்கள் கூட பனைத் தொழிலை ஆர்வமுடன் செய்யத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக தூத்துக்குடி அருகேயுள்ள சூசைபாண்டியாபுரம், சிறுபாடு கிராமங்களில் படித்த இளைஞர்கள் பனைத் தொழில் செய்கின்றனர்.
பனை தொழிலாளர்கள் பதநீர் காய்ச்சுவதற்காக பாத்திரங்கள் அரசு சார்பில் வழங்கப்படுகின்றன. ஆனால், பதநீர் காய்ச்சுவதற்கு ஏற்ற வகையிலான பாத்திரங்களாக அது இல்லை. பனைத் தொழிலாளர்களுக்கு ஏற்ற பாத்திரங்களை வழங்க வேண்டும். பதநீர் காய்ச்சும் செட்டுகள் அமைக்க ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
இந்த உதவித் தொகையும் உண்மையான பனைத் தொழிலாளர்களுக்கு சென்று சேரவில்லை. பனையேறும் இயந்திரத்தை வடிவமைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. அது பனை தொழிலாளர்கள் சிரமமின்றி பனையில் இருந்து பதநீரை இறக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றார் அவர்.