தருமபுரியில் யானை மரணம் 
தமிழகம்

தருமபுரி | மின்சாரம் பாய்ந்து மீண்டும் ஒரு யானை உயிரிழப்பு

எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கெலவள்ளி அருகே உயர் அழுத்த மின் பாதையை தொட்ட ஆண் யானை உயிரிழந்தது.

பாலக்கோடு வனச் சரகம் பிக்கிலி கிராம பகுதியில் கடந்த சில நாட்களாக ஆண் யானை ஒன்று விளை நிலங்களில் நடமாடி வந்தது. இந்த யானையை வனத்துக்குள் இடம் பெயரச் செய்யும் முயற்சியில் வனத்துறை பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். நேற்று (மார்ச் 17) இரவு இந்த யானை பாப்பாரப்பட்டி, காரிமங்கலம் பகுதி வழியாக கம்பைநல்லூர் பகுதிக்கு சென்றுள்ளது. வனத்துறையினரும் யானையை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இந்நிலையில், இன்று (மார்ச் 18) காலை கம்பைநல்லூர் அடுத்த கெலவள்ளி அருகேயுள்ள வி.பள்ளிப்பட்டு பகுதியில் ஏரிக்கரையில் ஏற முயன்ற இந்த யானை அப்பகுதியில் சென்ற உயர் அழுத்த மின்பாதையில் மோதியுள்ளது. இதில், யானையின் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அந்த யானை உயிரிழந்தது.

கடந்த வாரத்தில் பாலக்கோடு அடுத்த மாரண்ட அள்ளி பகுதியில் விளை நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் உயிரிழந்தன. இந்த சம்பவம் நடந்த இரண்டு வார இடைவெளியில் மீண்டும் ஒரு யானை மின்சார விபத்தில் உயிரிழந்திருப்பது விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT