கோவை: கோவையில் நாக்கு செயலிழந்து உணவு உட்கொள்ளாத நிலையில் இருந்த யானைக்கு சிகிச்சை அளிக்க அதனை நேற்று மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், லாரி மூலம் டாப்சிலிப் முகாமுக்கு கொண்டு சென்றனர்.
கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்துக்கு உட்பட்ட வெள்ளியங்காடு, ஆதிமாதையனூர் பகுதியில் வாயில் காயத்துடன் காட்டு யானை ஒன்று கடந்த சில நாட்களாக சுற்றி வந்தது.
நாக்கில் அடிபட்டதால் உணவோ, நீரோ உட்கொள்ள இயலாமல் உடல் மெலிந்து தவித்துவந்த அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர். அதன்படி நேற்று மயக்க ஊசி செலுத்தி, கும்கி யானை சின்னத்தம்பி உதவியுடன் அந்த யானை பிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, வனத்துறையினர் கூறும்போது, “இந்த பெண் யானைக்கு சுமார் 15 வயதிருக்கும். சுமார் 3 வாரங்கள் வரை உணவு உட்கொள்ளாமல் இருந்துள்ளது. யானையின் நாக்கு பகுதி முழுமையாக செயல் இழந்து விட்டது கால்நடை மருத்துவர்களின் ஆய்வில் தெரியவந்தது.
இதன்காரணமாகவே யானையால் தன்னிச்சையாக உணவு ஏதும் உட்கொள்ள இயலவில்லை. அதனால் உடல் மெலிந்துள்ளது. மற்றொரு யானை நாக்கு பகுதியில் குத்தியது போன்று உள்ளது. யானையை டாப்சிலிப்-ஐ அடுத்த வரகளியாறு யானைகள் முகாமுக்கு அழைத்துச் சென்று மரக்கூண்டில் வைத்து தொடர் சிகிச்சையளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி லாரியில் ஏற்றி அழைத்துச்செல்லப்பட்டுள்ளது” என்றனர்.