தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்குவதற்கு மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும். இது தொடர்பாக 8 வாரங்களில் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள் ளது.
குமரி மகா சபை செயலாளர் ஜெயக்குமார் தாமஸ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் ‘கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்குவதற்காக மத்திய அரசு 1986-ல் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளைத் தொடங்கியது. உண்டு உறைவிட பள்ளியான இருபாலர் பயிலும் நவோதயா பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை கற்பிக்கப்படுகிறது. இப்பள்ளிகளில் மாநில மொழி, ஆங்கிலம், இந்தி கற்பிக்கப்படுகிறது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனவே, தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, நவோதயா பள்ளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘நவோதயா பள்ளிகளில் ஏற்கெனவே 6 முதல் 8-ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்பட்டு வந்தது. தற் போது 10-ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் தமிழ் விருப்பப் பாடமாக உள்ளது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் 6 முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் முதன்மைப் பாடமாகவும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் விருப்பப் பாடமாகவும் கற்பிக்கப்படும்’ எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.எம்.ஆனந்தமுருகன் வாதிடும்போது, ‘‘நவோதயா பள்ளிகளில் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்கப்படுகிறது. இதனால் ஏழை மாணவ, மாணவிகள் பலன் பெறுவர்’’ என்றார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் புகழேந்தி வாதிடும்போது, ‘‘இரு மொழிக் கொள்கை அடிப்படையில் நவோதயா பள்ளிகள் தொடங்க தடை விதித்து அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. தற்போது இப்பள்ளிகள் தொடங்க வேண்டும் என்றால் அமைச்சரவைதான் முடிவெடுக்க முடியும். எனவே, தமிழக அரசுக்கு அவகாசம் வழங்க வேண்டும்’’ என்றார்.
இதை ஏற்க மறுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
நவோதயா பள்ளிகள் வந்தால் இந்தி திணிக்கப்படும் என கருதப்பட்டதால், தமிழகத்தில் இப்பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. தற்போது 6 முதல் 10-ம் வகுப்பு வரை தமிழில்தான் பாடங்கள் கற்பிக்கப்படும் என்றும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் தமிழ் விருப்பப் பாடமாக இருக்கும் என்றும் நவோதயா வித்யாலயா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து நவோதயா பள்ளிகளில் தமிழில் பாடங்கள் கற்பிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசு அச்சப்படத் தேவையில்லை.
தகவல் தொடர்பு இடைவெளி காரணமாக, தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது தாமதமாகி வருகிறது. இதனால், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க தேவையான கட்டமைப்பு வசதிகளை அரசு வழங்க வேண்டும். நவோதயா வித்யாலயா சார்பில் பள்ளி தொடங்க மாவட்டம்தோறும் மாநில அரசு 30 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 ஆண்டுகளுக்குள் தலா ரூ.20 கோடி செலவில் மத்திய அரசு நவோதயா பள்ளிக் கட்டிடத்தை கட்டும். நவோதயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நடைபெறும். உடனடியாக 30 ஏக்கர் நிலம் ஒதுக்க முடியாவிட்டாலும் 240 மாணவர்கள் பயிலும் வசதியுள்ள தற்காலிக கட்டிடம் ஒதுக்கினால் அதில் பள்ளி நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவதற்கு இடம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு 8 வாரத்தில் உரிய முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
திமுக கோரிக்கை
நவோதயா பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை யின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என திமுக செய்தித் தொடர்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை யில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறும்போது, ‘‘தமிழகத்தில் மத்திய அரசின் ஜவஹர் நவோதயா பள்ளிகளை தொடங்கக் கூடாது என்பதில் திமுக, அதிமுக அரசுகள் உறுதியாக இருந்தன. கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் நவோதயா பள்ளிகளை அனுமதிக்கவில்லை. ஆனால், தற்போது தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. நவோதயா பள்ளிகள் இந்தி திணிப்புக்கு வழிவகுக்கும். எனவே, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். அதிமுக அரசு மேல்முறையீடு செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’’ என்றார்.