திருநெல்வேலி- தென்காசி இடையே நான்கு வழிச்சாலை பணி நடைபெறுகிறது. (கோப்பு படம்) 
தமிழகம்

தென்காசி | 25 மாதங்களை கடந்தும் முடியவில்லை: தென்காசி - நெல்லை நான்குவழிச் சாலை பணி மந்தம்

செய்திப்பிரிவு

தென்காசி: திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது இரு மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கை. இரு மாவட்டங்களை மட்டுமின்றி தமிழகம்- கேரள மாநிலத்தை இணைக்கும் முக்கியமான சாலையாகவும் இது விளங்குகிறது.

சுற்றுலாத் தலமான குற்றாலம் மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு வருவோர், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்வி நிலையங்களுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், கேரள மாநிலத்துக்கு தொழில் நிமித்தமாக செல்வோர் என லட்சக்கணக் கானோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

பொதுமக்களின் நீண்டகால கனவான நான்குவழிச் சாலை பணி கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி தொடங்கியது. பழைய பேட்டையில் இருந்து ஆலங்குளம் வரை 22.7 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரு தொகுப்பாகவும், ஆலங்குளம் முதல் தென்காசி ஆசாத் நகர் வரை 22.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு மற்றொரு தொகுப்பாகவும் இப்பணி நடைபெற்று வருகிறது.

பழைய பேட்டை- ஆலங்குளம் இடையே 2022 செப்டம்பர் 2-ம் தேதிக்குள்ளும், ஆலங்குளம்- ஆசாத் நகர் இடையே 2022 ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள்ளும் பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மொத்தம் 18 மாதங்களில் நான்குவழிச் சாலை பணியை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில், பணி தொடங்கி 25 மாதங்களை கடந்தும் முடிந்த பாடில்லை.

பணிகள் மந்தமாக நடைபெறு வதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. ஆங்காங்கே நடைபெற்று வரும் சாலைப் பணிகளால் பயண நேரமும் அதிகரித்துள்ளது. சாலைப் பணியை முடித்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கோட்ட பொறியாளர் பதில்: இந்நிலையில் பாவூர்சத் திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா திருநெல்வேலி- தென்காசி நான்குவழிச் சாலை பணிகள் குறித்த பல்வேறு விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டிருந்தார். அதற்கு தென்காசி கோட்ட பொறியாளர் ஜெகன் மோகன் அளித்த பதிலில், ‘திருநெல்வேலி - செங்கோட்டை - கொல்லம் மாநில நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணியில் பேட்டை முதல் ஆலங்குளம் வரை 22.7 கி.மீ. தொலைவுக்கான பணியில் 71.91 சதவீத பணிகளும், ஆலங்குளம் முதல் ஆசாத் நகர் வரை 22.9 கி.மீ. தொலைவுக்கான பணியில் 54.45 சதவீத பணிகளும் நிறைவடைந்துள்ளது.

பேட்டை முதல் ஆலங்குளம் வரை வரும் மே 25-ம் தேதிக்குள்ளும், ஆலங்குளம் முதல் ஆசாத் நகர் வரை வரும் ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள்ளும் நான்குவழிச் சாலை பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாறாந்தையில் அமைய இருக்கும் சுங்கச்சாவடி பணிகள் அரசின் கொள்கை முடிவுக்கும், அதிகாரிகளின் முடிவுக்கும் உட்பட்டது. கரோனா பெருந்தொற்று, மரங்களை பிடுங்கி நடுதல், குவாரி பிரச்சினைகள், உள்ளாட்சிப் பணிகள், மண் எடுப்பதற்கான அனுமதி ஆகியவை நான்குவழிச் சாலை பணிகளில் தாமதத்துக்கு காரணமாக உள்ளது.

பேட்டை முதல் ஆலங்குளம் வரை 134.25 சதவீத காலம் முடிவடைந்த நிலையில் 71.91 சதவீத பணிகளும், ஆலங்குளம் முதல் ஆசாத் நகர் வரை 134.62 சதவீத காலம் முடிவடைந்த நிலையில் 54.45 சதவீத பணிகளும் முடிவடைந்துள்ளது. காலதாமதத்துக்காக பணியை மேற்கொள்ளும் நிறுவனத் துக்கு அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாண்டியராஜா கூறும்போது, “2 ஆண்டுகளில் ஒரு தொகுப்பில் 72 சதவீத பணிகளும், மற்றொரு தொகுப்பில் 55 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள 5 மாதங்களில் எஞ்சிய பணிகளை முடிப்பது கடினமான காரியம். சாலையில் கோடுகள் வரைதல், எச்சரிக்கை பலகைகள் வைத்தல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

திருநெல்வேலி - தென்காசி நான்குவழிச் சாலை பணிகள் நிறைவு பெறாத காரணத்தால் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் செல்வதற்கு அதிக நேரம் ஆகிறது. அதிக விபத்துகளும் நடக்கின்றன. எனவே நான்குவழிச் சாலை பணிகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT