சென்னை: "ஊடக விசாரணை என்ற பெயரில் யாரையாவது குற்றம் சுமத்தும் நிலையில், நீதிமன்ற விசாரணையின் முடிவில் அவர்கள் குற்றமற்றவர் என்பது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு இழைத்த அநீதியை சரிசெய்ய முடியாது" என்று சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா கூறியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற பத்திரிகையாளர்கள் சங்க தொடக்க விழா தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் கல்வெட்டைத் திறந்துவைத்து, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பேசியது: "ஒவ்வொரு சட்ட ரீதியான அமைப்புக்குமான அதிகார வரம்பு அரசமைப்பு சட்டத்தால் வரையறுக்கப்பட்டுள்ளது. அரசமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தபோது பொதுநல வழக்குகள் என்பது நடைமுறையில் இல்லை. ஜனநாயகத்துக்கு ஆபத்து நிகழாமல் இருக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என்.பகவதி, பொதுநல வழக்கு ஒன்றை கொண்டு வந்தார். நீதிமன்றத்தை அணுக முடியாதவர்களுக்கு பொதுநல வழக்கு பெரிய பலன் தரும்.
ஓர் அஞ்சல் அட்டையில் எழுதி, உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பினால், அது நீதிபதிகளின் கவனத்துக்கு வரும் நிலையில், அதனை நீதிமன்றம் வழக்காக எடுத்துக் கொள்ள முடியும். அதற்கு காரணம் பத்திரிகையாளர்கள்தான். இந்தியாவில் 2022-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 892 தொலைக்காட்சிகளும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான செய்திப் பத்திரிகைகளும் உள்ளன. சில நேரங்களில், வதந்திகளைக் கூட இத்தகைய பொறுப்பு வாய்ந்த ஊடகங்களில் சில வெளியிட்டு வருகின்றன.
ஜனநாயகத்தைக் காக்கும் 4-வது தூணாக பத்திரிகைகளை கருதும்போது அவர்களின் பொறுப்பு முக்கியமானது. அனைவருக்கும் கருத்து, பேச்சு சுதந்திரம் உள்ளது. பத்திரிகைகளுக்கென்று தனி உரிமை இல்லை. கருத்து, பேச்சு சுதந்திரம்தான் பத்திரிகைகளுக்கான சுதந்திரம். ஊடக விசாரணை என்ற பெயரில் யாரையாவது குற்றம் சுமத்தும் நிலையில், நீதிமன்ற விசாரணையின் முடிவில் அவர்கள் குற்றமற்றவர் என்பது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு இழைத்த அநீதியை சரிசெய்ய முடியாது.
ஊடகங்கள் ஒரு நீதி விசாரணையை செய்து அதனை வெளியிட நேர்வதால் நீதித் துறைக்கு ஒருவிதமான அழுத்தம் ஏற்படுகிறது. எனவே, பத்திரிகைகள், செய்தி ஊடகங்கள் தங்களது எல்லைக்கோட்டைக் கடக்காமல் இருந்து நீதித் துறைக்கு துணைபுரிய வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகளை பத்திரிகைகள் வெளியிடுவதன் மூலம் எளிய மக்களுக்கு நீதித்துறை குறித்து அறிவூட்டப்படுகிறது. எனவே, இந்தப் பணியை, விருப்பு வெறுப்பின்றி உண்மையை நடுநிலை தவறாமல் செயல்பட வேண்டும்" என்று அவர் பேசினார்.
விழாவில் சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார். ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஜெ.சத்யநாராயண பிரசாத், லட்சுமி நாராயணன், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ்.பிரபாகரன், சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.