தமிழகம்

கும்பகோணம் | மோசடி வழக்கில் ஹெலிகாப்டர் சகோதரர்களின் வங்கி கணக்குகள் ஆய்வு: பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு

சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்களின் வங்கி கணக்குகள் குறித்து பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று(மார்ச் 17) விசாரணை மேற்கொண்டனர்.

கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி, தீட்சிதர் தோட்டத்தைச் சேர்ந்தவர் எம்.ஆர்.கணேஷ் (51). இவரது சகோதரர் எம்.ஆர்.சுவாமிநாதன் (48), இவர்கள் இருவரும் தங்களது வீட்டிலேயே நிதி நிறுவனத்தை நடத்தி வந்தனர். மேலும், ஹெலிகாப்டரை சொந்தமாக வைத்திருந்ததால் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்களது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஓராண்டில் பணம் இரட்டிப்பாக வழங்கப்படும் என கூறியதை அடுத்து கும்பகோணம் பகுதியில் பலரும் பல கோடி ரூபாய் முதலீடு செய்தனர்.

இதில் பணத்தை முதலீடு செய்து திருப்பி வழங்காமல் மோசடி செய்துவிட்டதாகக் கூறி கும்பகோணத்தைச் சேர்ந்த பலரும் மாவட்ட தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் உள்பட சிலரை கடந்த 2021ம் ஆண்டு கைது செய்தனர்.

தற்போது அனைவரும் ஜாமினில் வெளியில் உள்ள நிலையில், பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு டிஎஸ்பி முத்துக்குமார், ஆய்வாளர் சுதா உள்ளிட்ட போலீஸார் நேற்றும் இன்றும் கும்பகோணத்தில் உள்ள வங்கியில், அவர்களது பெயரில் உள்ள கணக்குகள், நகைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கும்பகோணம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT