கோவை: தமிழகத்தில் பல்லாயிரம் தொழிலாளர்கள் வடமாநிலங்களிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்களாக வருகை தந்து, பல்லாண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தமிழகத்தில் பாதுகாப்பாகவும் நலமுடனும் தங்களது பணியினை ஆற்றி வருகிறார்கள்.
சமீபத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுகிறார்கள் என்று பொய்யாகப் பரப்பப்பட்ட செய்தி, தேவையற்ற பதட்டமான சூழலை உருவாக்கியது. இவ்விஷயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு, உண்மை நிலையினை உலகுக்கு உணர்த்தினார்.
தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை வெளியுலகிற்கு உணர்த்தும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ - ‘இந்துஸ்தான்’ நாளிதழ்கள் இணைந்து ‘வந்தார்க்கும் வாழ்வு உண்டு’ எனும் புலம்பெயர் வடமாநிலத் தொழிலாளர்களின் இருப்பும் பாதுகாப்பும் குறித்த பகிர்வரங்கை நடத்துகின்றன.
இந்த பகிர்வரங்கு நாளை (மார்ச் 18, சனிக்கிழமை) காலை 10 மணிக்கு, கோவை ஆர்.எஸ்.புரம் மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள ஸ்ரீ கோயமுத்தூர் குஜராத்தி சமாஜ் அரங்கில் நடைபெறுகிறது. இந்த பகிர்வரங்கில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் பங்கேற்க உள்ளார்.
சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய ஜவுளி தொழில்கள் கூட்டமைப்பின் தலைவர் டி.ராஜ்குமார், தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத்தின் (ஓஸ்மா) தலைவர் ஜி.அருள்மொழி, மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் (ஆர்டிஎப்) தலைவர் எம்.ஜெயபால் ஆகியோர் பங்கேற்று கருத்துரையாற்ற உள்ளனர். இந்த நிகழ்வில் புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் பங்கேற்று, தமிழகத்தில் தங்களது பாதுகாப்பான இருப்பைப் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள்.