ஸ்ரீவில்லிபுத்தூர் | சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சுகாதாரத் துறை, வனத் துறை, காவல் துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட மதுரை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் சரணாலய வனப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அமாவாசை, பவுர்ணமியையொட்டிய 4 நாட்களுக்கு மட்டும் வனத்துறை அனுமதி அளிக் கிறது.
ஆண்டுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இக்கோயிலில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால், பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
சதுரகிரி கோயிலைச் சுற்றியுள்ள 75.76 ஏக்கர் நிலப் பகுதி கோயிலுக்குச் சொந்தமானது.கோயில் அமைந்துள்ள வனப்பகுதி மதுரை மாவட்டம் சாப்டூர் பீட் பகுதியாகும். கோயிலுக்குச் செல்லும் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது.
இதனால் தாணிப்பாறை நுழைவு வாயில் வரை விருதுநகர் மாவட்ட காவல்துறையினரும், வனப்பகுதியில் மதுரை மாவட்ட வனத் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். சதுரகிரி மலையேறும்போது உயிரிழப்பு ஏற்பட்டால் இறந்தவரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக 10 கி.மீ. தூரத்தில் இருக்கும் வத்திராயிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், 60 கி.மீ தூரத்தில் இருக்கும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்கின்றனர்.
சாப்டூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இதனால், உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்தினர் சாப்டூர், உசிலம்பட்டி என அலைக்கழிக்கப்படுகின்றனர். மேலும், பக்தர்களுக்குத் தேவையான பாதுகாப்பு, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளைச் செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படும் நாட்களில் காலை 6 மணியிலிருந்தே பக்தர்கள் மலையேறத் தொடங்கி விடுவர். ஆனால் பக்தர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை அமைக்க மதுரையிலிருந்து சுகாதாரக் குழு வருவதற்கு காலை 9 மணிக்கு மேல் ஆகி விடுகிறது.
அதற்குள் 80 சதவீத பக்தர்கள் மலையேறிச் சென்று விடுகின்றனர். மலைப்பகுதியில் சிகிச்சை தேவைப்படுவோருக்கு உதவுவதிலும் சிக்கல் நிலவுகிறது. இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண மதுரை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த சுகாதாரத் துறை, வனத்துறை, காவல் துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இதற்கென தனி அலுவலகத்தை தாணிப்பாறையில் அமைக்க வேண்டும் என 2 மாவட்ட ஆட்சியர்களுக்கும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.