தமிழகம்

தேவகோட்டை அருகே ரகசிய குறியீடுடன் வந்த புறா: போலீஸார் விசாரணை

செய்திப்பிரிவு

தேவகோட்டை: தேவகோட்டை அருகேயுள்ள சருகனியைச் சேர்ந்தவர் ஜோசப் பெல்லிஸ். விளையாட்டுப் பயிற்சியாளரான இவரது வீட்டுக்குள் நேற்று முன்தினம் மாலை கருப்பு, வெள்ளை நிற புறா ஒன்று வந்தது. சோர்வாக இருந்த அந்தப் புறாவுக்கு ஜோசப் பெல்லிஸ் உணவளித்தார்.

நேற்று காலை வரை அந்தப் புறா வெளியேறாமல் அங்கேயே இருந்தது. மேலும், புறாவின் இரு கால்களிலும் தகடுகள் கட்டப்பட்டு இருந்தன. அதில் சில ஆங்கில வார்த்தைகளும், எண்களும் இருந்தன. இதனால் சந்தேகமடைந்த ஜோசப் பெல்லிஸ் திருவேகம்பத்தூர் போலீஸில் புகார் தெரிவித்தார்.

போலீஸ் விசாரணையில், புறா காலில் டிஹெச்ஆர்பிசி என ஆங்கில வார்த்தை இருந்தது. அது தூத்துக்குடி ஹார்பர் ரேஸிங் பிஜியன் கிளப் என்பதை குறிக்கிறது. இதையடுத்து அவர்களிடம் விசாரித்தபோது, கடந்த மாதம் ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு புறா பந்தயம் வைத்ததாகவும், அதில் திசை மாறி புறா வந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT