பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கருப்புக் கொடி காட்டிய 37 பேரை போலீஸார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர்ஒன்றியத்தைச் சேர்ந்த 73 கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்குவதற்காக லப்பைக்குடிகாடு அருகே வெள்ளாற்றில் ராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதனால், தங்கள் பகுதியில் நீராதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி லப்பைக்குடிகாடு, பெண்ணகோணம் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், லப்பைக்குடிகாடு பகுதியில் பல்வேறு அரசு நலத் திட்டங்களை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று சென்றார். அப்போது, கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் லப்பைக்குடிகாடு நீராதார பாதுகாப்புக் குழுவைச்சேர்ந்தவர்கள், அமைச்சர் சிவசங்கருக்கு கருப்புக் கொடி காட்டப் போவதாக தகவல் பரவியது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 பேரை நேற்று காலை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், லப்பைக்குடிகாட்டில் அரசு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, நேற்று மதியம்அமைச்சர் சிவசங்கர் காரில் திரும்பிச் சென்றபோது, பேருந்துநிறுத்தம் அருகே மறைந்திருந்த சிலர் திடீரென ஓடிவந்து, அமைச்சருக்கு கருப்புக் கொடி காட்டினர்.
மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி வெள்ளாற்றில் தண்ணீர் எடுக்கும் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதில் அமைச்சர் சிவசங்கர் முனைப்பு காட்டுவதாக, அவரைக் கண்டித்து முழக்கமிட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 11 பெண்கள் உட்பட 37 பேரை மங்களமேடு போலீஸார் கைது செய்தனர்.