தமிழகம்

தஞ்சாவூர் | ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் சோதனையில் ரூ.52,430 பறிமுதல்

சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் இரு இடங்களில் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.52,430 ரொக்கம் சிக்கியது.

தமிழகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் திடீர் சோதனை இன்று மேற்கொண்டனர். இதேபோல், தஞ்சாவூர் - புதுக்கோட்டை சாலையிலுள்ள பிள்ளையார்பட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கு அலுவலகத்தில் தஞ்சாவூர் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புக் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜூ தலைமையில், மாவட்ட கண்காணிப்புக் குழு அலுவலர் முத்துவடிவேல் உள்ளிட்டோர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கணக்கில் வராத ரூ.34,800 ரொக்கம் சிக்கியது.

இதேபோல், கும்பகோணத்தில் வணிகவரித் துறையின் பறக்கும் படை வாகனத்தில், தஞ்சாவூர் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புக் காவல் ஆய்வாளர் சசிகலா தலைமையில் மாவட்ட கண்காணிப்புக் குழு அலுவலர் சதீஷ் உள்ளிட்டோர் திடீர் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத ரூ.17,630 ரொக்கத்தைக் கைப்பற்றினர். இது தொடர்பாக தஞ்சாவூர் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புக் காவல் பிரிவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT