அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 
தமிழகம்

பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் `ஆப்சென்ட்' : அமைச்சர் இன்று ஆலோசனை

செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் ஆனது தொடர்பாக அமைச்சர் தலைமையில் இன்று (மார்ச்.16) ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13ம் தேதி தொடங்கியது. முதல் நாள் நடைபெற்ற மொழித் தேர்வை 50,000 பேர் எழுதவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று (மார்ச். 16) ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், "பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் ஆப்சென்ட் ஆனது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இதற்கான காரணம் தொடர்பாகவும், இதை குறைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

2021 - 2022ம் ஆண்டில் இடையில் நின்ற 1.90 லட்சம் பேரை கண்டறிந்து பள்ளியில் சேர்த்தோம். இதில் பலர் 5 நாட்கள் மட்டுமே வந்து விட்டு, அதன் பிறகு நின்று விட்டனர். ஆனாலும் அவர்கள் அனைவருக்கும் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அவர்களை எப்படியாவது தேர்வு எழுத வைத்து விடலாம் என்று தான் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. தற்போது இதற்கான காரணத்தை ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

விரைவில் தொடங்க உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இதற்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் இது அதிகமாக உள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. முன்னதாக 2019ம் ஆண்டு 49 ஆயிரம் பேர் தேர்வுகளுக்கு வராமல் இருந்துள்ளனர். பயம், சமூக பொருளாதார நிலை, கரோனா என்று அனைத்து பிண்ணனி தொடர்பாகவும் ஆய்வு செய்யப்படவுள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT