திருப்போரூர்: திருப்போரூர் அருகே கண்ணகப்பட்டு இள்ளலூர் சாலையை மறித்து திமுக சார்பில் பொதுக்கூட்ட மேடைஅமைக்கப்பட்டதால் மக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் முன்னிட்டு திருப்போரூர் திமுக சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக கண்ணகப்பட்டு - இள்ளலூர் சாலையை முழுவதுமாக மறித்து மேடை போடப்பட்டது. காலை முதலே மேடை அமைக்கும் பணி நடந்ததால் சாலையை பயன்படுத்த முடியாமல் மக்களும் அப்பகுதி வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர். மேலும் வாகன ஓட்டிகள் மாற்றுவழியில் சென்றதால் பல கிமீ சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
பொது மக்களுக்கு இடையூறாக பொதுக் கூட்டங்கள் நடத்த அனுமதிக்க கூடாது என்ற உத்தரவு இருந்தும் ஆளுங்கட்சி என்பதால் திருப்போரூர் போலீஸார் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் சாலையின் ஒரு பகுதியை போக்குவரத்துக்கு அனுமதித்திருக்கலாம். முழுமையாக அடைத்தது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த பொதுக்கூட்டத்தால் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள ஐயப்பன் கோயில் பகுதியில்தான் வழக்கமாக கூட்டம் நடைபெறும். தற்போது சாலையை மறித்து கூட்டம் போட அனுமதி அளித்திருப்பது தவறாகும். இடையூறு இருக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன்தான் கூட்டம், ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றன. அவை மீறப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.