திருச்சியில் துப்பாக்கிச் சூடு நடந்த பகுதியை பார்வைியிட்ட மாநகர காவல் ஆணையர் எம்.சத்தியபிரியா | கோப்புப்படம் 
தமிழகம்

கொலை, திருட்டு வழக்கில் தொடர்புடையோரை சுட்டுப் பிடித்த சம்பவம்: மனித உரிமை ஆணைய ஐஜி-க்கு உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: கொலை, திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்களை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, மனித உரிமை ஆணைய ஐஜிக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயபிரகாஷ், தஞ்சாவூர் நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நடேச தமிழார்வன் கொலை வழக்கில் பிரவீன் ஆகியோர் சுட்டு பிடிக்கப்பட்டனர்.

இதேபோல், திருச்சியில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட துரைசாமி, சோமு ஆகிய இருவர் தப்ப முயன்ற போது போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்டனர். மேலும்,மதுரை சத்தியபாண்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராஜா தப்ப முயற்சித்த போது துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டனர்.

காவல் துறையினர் தற்காப்புக்காக இந்த துப்பாக்கி சூடுகள் நடத்தியதாக கூறப்பட்டது. இந்த சம்பவங்கள் தொடர்பாக தினசரி நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி, ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, மனித உரிமை ஆணைய புலன் விசாரணைப் பிரிவு ஐஜி.க்கு மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT