மாணவியின் வீட்டுக்கு மின் வசதி செய்து கொடுத்த அதிகாரிகள். 
தமிழகம்

மண்ணெண்ணெய் விளக்கில் சிரமப்பட்டு படித்த மாணவியின் வீடு ஒரே நாளில் ஒளிர்ந்தது: தூத்துக்குடி ஆட்சியருக்கு குவியும் பாராட்டுகள்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வீர இடக்குடி தெருவைச் சேர்ந்த ஆறுமுகம்- லெட்சுமி தம்பதிக்கு பேச்சித்தாய் என்ற மகளும், ஐயப்பன் என்ற மகனும் உள்ளனர்.

பேச்சித்தாய் பிளஸ் 2-வும், ஐயப்பன் 5-ம் வகுப்பும் படிக்கின்றனர். ஆறுமுகம் இறந்துவிட்டதால், முருக்கு வியாபாரம் செய்து இரு குழந்தைகளையும் லெட்சுமி வளர்த்து வருகிறார். இவர்களது வீட்டுக்கு மின்சார வசதி இல்லை.

தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருவதால், மாணவி பேச்சித்தாய் வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கில் கஷ்டப்பட்டு படித்துவந்தார்.

இந்த செய்தி வாட்ஸ்அப் குழுக்களில் பரவியது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் மாணவி பேச்சித்தாய் வீட்டுக்கு உடனே மின் வசதிசெய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், மின் இணைப்புக்கு தேவையான வைப்புத் தொகை, வையரிங் செலவு, மின் விளக்குகள் வாங்குவதற்கான செலவு போன்றவற்றுக்கு ஆட்சியரின் விருப்புரிமை நிதியில் இருந்து நிதி வழங்கப்பட்டது. ஒரே நாளில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு பேச்சித்தாய் வீடு நேற்று முன்தினம் இரவு மின் விளக்குகளால் ஒளிர்ந்தது.

பேச்சித்தாயின் தாயார் லெட்சுமி கூறும்போது, “ஒரே நாளில் எனது வீட்டுக்கு மின் வசதி செய்து, எங்கள் வீட்டை மட்டுமல்ல, எனது மகளின் கல்விக்கும் மாவட்ட ஆட்சியர் ஒளியூட்டியுள்ளார். அனைத்து செலவுகளையும் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமைநிதியில் இருந்தே வழங்கியுள்ளார். எங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றிய ஆட்சியருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்” என்றார். சமூக வலைதளங்களிலும் ஆட்சியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

SCROLL FOR NEXT