திருச்சி ஜி கார்னர் ரஞ்சிதபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடை.படம்: ஜி.ஞானவேல்முருகன் 
தமிழகம்

திருச்சி | எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் அமைத்த பயணிகள் நிழற்குடையும், தொடரும் சர்ச்சைகளும்..!

அ.வேலுச்சாமி

திருச்சி: திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ரஞ்சிதபுரத்தில் பொன்மலை ஜி கார்னரிலிருந்து டிவிஎஸ் டோல்கேட் செல்லும் அணுகு சாலையையொட்டி, திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிழற்குடையின் பக்கவாட்டில் உள்ள தடுப்பில் அரசின் திட்டங்களை விளக்கும் வகையில் புகைப்படங்கள் உள்ளன. வெளிப்பகுதியின் மேற்பரப்பிலும், உட்புறமும் முதல்வர் மு.க.ஸ்டாலின், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் படங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரின் படங்கள் உள்பகுதியில் சிறிய அளவிலும் வைக்கப்பட்டுள்ளன.

சென்னை- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பார்வைமிகுந்த இடத்திலுள்ள இந்த நிழற்குடையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படம் இடம்பெறவில்லை. இந்த தொகுதியை உள்ளடக்கிய தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் படத்துக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என அவரது ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

கல்வெட்டால் சர்ச்சை: இந்நிலையில், மார்ச் 8-ம் தேதி இந்த பயணிகள் நிழற்குடை, மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த அதற்கான கல்வெட்டையும் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் திறந்து வைத்தார். கல்வெட்டில் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், மண்டலக் குழுத் தலைவர் ஜெயநிர்மலா, 48-வது வார்டு திமுக கவுன்சிலர் தர்மராஜ் ஆகியோரின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தன.

மாநகராட்சி மூலம் வைக்கப்பட்ட கல்வெட்டில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரான கே.என்.நேரு, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெறாதது குறித்து அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர். ஆனால், முக்கிய நிர்வாகிகள், இப்பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் எனக்கூறி அப்படியே விட்டுவிட்டனர்.

ஆட்சியரிடம் அதிமுக புகார்: இந்த பரபரப்பு அடங்குவதற்குள், நிழற்குடையின் மேற்பகுதியில் விதிகளை மீறி தனது பெயரை திமுகவின் கருப்பு-சிவப்பு வண்ணங்களில் எழுதி வைத்துள்ளதாக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் மீது அடுத்த சர்ச்சையை அதிமுக கிளப்பியுள்ளது.

இதுகுறித்து தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் சார்பில் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில், ‘தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள இந்த நிழற்குடையில் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பெயர் திமுகவின் கருப்பு-சிவப்பு வண்ணங்களில் எழுதப்பட்டுள்ளது.

இது சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி பயன்பாட்டு விதிமுறைகள், அரசு அலுவலகங்கள் கட்டும் சட்ட விதிகளுக்கு புறம்பானது. எனவே, ஆட்சியர், பயணிகள் நிழற்குடையில் உள்ள விதிமீறல்களை சரிசெய்ய வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேண்டுமென்றே புகார்: இதுகுறித்து எம்எல்ஏ இனிகோ இருதயராஜிடம் கேட்டபோது, ‘‘அந்த இடத்தில் பேருந்து நிழற்குடை இல்லாததால் மழை, வெயிலால் பயணிகள் அவதிப்படுவதாக தெரிவித்ததால், எனது தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கி, மாநகராட்சி மூலம் அங்கு நிழற்குடை கட்டியுள்ளோம்.

அதிலுள்ள புகைப்படங்கள், பெயர்கள் ஆகியன எவ்வித உள்நோக்கத்துடனும் செய்யப்படவில்லை. நிழற்குடையின் அனைத்து பணிகளும் மாநகராட்சி அதிகாரிகளால்தான் மேற்கொள்ளப்பட்டது. திறப்பு விழாவன்று நிழற்குடையில் எனது பெயர் கருப்பு-சிவப்பு வண்ணத்தில் எழுதியிருந்ததைக் கண்டதும், இது விதிமீறலாக கருதப்பட வாய்ப்புள்ளதால், வண்ணத்தை மாற்றிவிடுமாறு அப்போதே மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறியிருந்தேன்.

அவர்களும் மாற்றிவிடுவதாக தெரிவித்தனர். இதை தெரிந்துகொண்டு, அதிமுகவினர் வேண்டுமென்றே புகாராக அளித்துள்ளனர். இதுகுறித்து நான் கவலைப்பட மாட்டேன். கல்வெட்டில் அமைச்சர், மேயர் பெயர்கள் இடம் பெறாதது குறித்து எனக்குத் தெரியவில்லை.

எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இதற்குமுன் கட்டப்பட்ட 5 நிழற்குடைகளின் கல்வெட்டுகளும் இதுபோன்றுதான் இருந்ததாக அறிகிறேன். அப்போது எந்த பிரச்சினையும் எழவில்லை. நிழற்குடை, கல்வெட்டில் யாருடைய பெயரையும் எழுதவோ, எழுத வேண்டாம் என்றோ மாநகராட்சி அதிகாரிகளிடம் நான் ஒருபோதும் கூறியதில்லை” என்றார்.

SCROLL FOR NEXT