தமிழகம்

ஈரோடு | அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை ஒரு மாதத்தில் முதல்வர் தொடங்கி வைப்பார்: அமைச்சர் முத்துசாமி தகவல்

செய்திப்பிரிவு

ஈரோடு: அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை இன்னும் ஒரு மாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என வீட்டுவசதித்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி தெரிவித்தார்.

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில், அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், வீட்டு வசதித்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி தலைமையில் நேற்று நடந்தது. ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உன்னி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின், அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:

பவானி ஆற்றில் காலிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்தில் இருந்து, ஆண்டுக்கு 1.50 டிஎம்சி உபரி நீரை, குழாய்கள் மூலம் எடுத்துச் சென்று, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோட்டில் உள்ள 1045 குளங்களுக்கு நீர் நிரப்பும் வகையில், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 958 கி.மீ. நீளத்துக்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்துள்ளது. சில சாலைப் பணிகள் காரணமாக, குளங்களுடன் இணைக்கும் குழாய்களில் கசிவு ஏற்பட்டது. இந்த திட்டத்தில் குழாய் அமைப்பது தொடர்பாக ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு காரணமாக, 15 குளங்களில் நீர் நிரப்பும் திட்டப்பணிகள் மட்டும் பாதிக்கப்படும்.

இத்திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 4 நீரேற்று நிலையங்களில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. மீதமுள்ள 2 நீரேற்று நிலையங்களில், விரைவில் சோதனை ஓட்டம் நடைபெறும். அனைத்து பணிகளும் 20 நாட்களில் நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுஉள்ளது. எனவே, ஒரு மாதத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்றார்.

SCROLL FOR NEXT