சென்னை: சென்னையில் ஆவின் நிறுவனம் மூலம் 14 லட்சம் லிட்டர் ஆவின்பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதற்கிடையில், ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதால், சென்னையில் உள்ள மாதவரம் மத்தியபால் பண்ணை, சோழிங்கநல்லூர், அம்பத்தூர் பால் பண்ணைகளுக்கு 3 லட்சம் லிட்டர் வரை பால் வரத்து குறைந்துள்ளது. இதனால், ஆவின் பால் விநியோகமும் கடந்த சில நாள்களாக குறைந்து வருகிறது.
இந்நிலையில், சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணைக்குபால் வரத்து குறைவு, தொழிலாளர் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால், தென் சென்னையின் பல இடங்களில் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது.
திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், அடையாறு, வேளச்சேரி, மடிப்பாக்கம், பெருங்குடி, உள்ளகரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் பால் விநியோகம் குறைந்ததால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, "பால் கொள்முதல் சரிவு, ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்சினை காரணமாக, சென்னையில் குறிப்பிட்ட சில இடங்களில் பால் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இந்தப் பிரச்சினை சரிசெய்யப்பட்டது.எனினும், பால் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எனவே, ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படாது" என்றனர்.