தமிழகம்

மாவட்டங்களின் தனித்துவமான பொருட்கள் ஏற்றுமதிக்காக புதிய திட்டம்: அமைச்சர் தா.மோ. அன்பரசன்

செய்திப்பிரிவு

சென்னை: மாவட்டங்களின் தனித்துவம் வாய்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்ய மாவட்ட அளவிலான ஏற்றுமதி மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்படும் என்று குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

தமிழக அரசின் குறு, சிறு மற்றும்நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் ‘FaMe TN’ மற்றும் ஆர்எக்ஸ்ஐஎல் குளோபல் நிறுவனம் இணைந்து நடத்தும் பன்னாட்டு வர்த்தக நிதி சேவைகள் தளத்தின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு மற்றும் குழு கலந்தாய்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம், சென்னை, கிண்டி, சிட்கோ தலைமையிடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: நாட்டில் 6.30 கோடி குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் (MSME) இயங்குகின்றன. இதன்மூலம், 11 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

நாட்டின் மொத்த உள்நாட்டுஉற்பத்தியில் இந்த நிறுவனங்கள் 3-ல் ஒரு பகுதியும் மொத்த ஏற்றுமதியில் 45 சதவீத பங்கையும் வகிக்கின்றன. இதில், தமிழகத்தின் பங்களிப்பு 9.25 சதவீதமாக உள்ளது.தமிழகம் ரூ.1.93 லட்சம் கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்து நாட்டிலேயே 3-வது பெரிய ஏற்றுமதி மாநிலமாக விளங்குகிறது.

தமிழகத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் 10 இடங்களில் உள்ள ஏற்றுமதி மையங்களை மேம்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ஏற்றுமதி குறித்த ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்க கோயம்புத்தூர், திருச்சி, ஒசூர், மதுரை ஆகிய 4 இடங்களில் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி தகவல் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

அனைத்து மாவட்ட தொழில் மையங்களிலும் ஏற்றுமதி மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. பயிற்சி பெற்ற அலுவலர்கள் மூலம் ஏற்றுமதியாளர்களுக்கு தேவைப்படும் அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்படும்.

இந்த மையங்களில் ஏற்றுமதிசெய்யப்படும் பொருட்கள் மற்றும்ஏற்றுமதி செய்யப்படும் நாடுகள்குறித்த தகவல்கள் பராமரிக்கப்படும். எம்எஸ்எம்இ நிறுவனங்களை ஏற்றுமதியாளர்களாக மாற்றவும், ஏற்றுமதியாளர்களுக்குத் தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகளைக் கண்டறிந்து மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்தின் தனித்துவம் வாய்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்யமாவட்ட அளவிலான ஏற்றுமதிமேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT