ராமேசுவரம்: ராமநாதசுவாமி கோயிலின் தோற்றத்தில் அமைய உள்ள ராமேசுவரம் ரயில் நிலையத்தின் மறு சீரமைப்புப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. தற்போது ஒப்பந்தப்புள்ளியை கோவையைச் சேர்ந்த நிறுவனம் ரூ.90.20 கோடிக்கு எடுத்துள்ளது.
ராமேசுவரத்துக்கு நாடு முழுவதுமிருந்து பக்தர்கள் வருகை அதிகரிப்பதையொட்டி, ராமேசுவரம் ரயில் நிலையத்தை விரிவாக்கி மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள 26.5.2022-ல் பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
ரயில் நிலையத்தின் முகப்புப் பகுதி, ராமநாதசுவாமி கோயில் போன்ற தோற்றத்திலும், கட்டிடத்தின் தூண்கள் கோயில் பிரகாரத்தில் உள்ள தூண்கள் போன்றும் அமைக்கப்பட உள்ளன.
தற்போதைய ரயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் 7,158 சதுர மீட்டர் பரப்பளவில் 2 மாடிக் கட்டிடம் அமைய இருக்கிறது. இதில் பயணிகளுக்காக பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. வடக்குப் பகுதியில் அமைய இருக்கும் ஒரு மாடி கட்டிடத்தில் ரயில்வே நிர்வாக அலுவலகங்கள் அமைய இருக்கின்றன.
மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு, கோவையைச் சேர்ந்த நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளன.
இதுகுறித்து மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ராமேசுவரம் ரயில் நிலையத்தில் விமான நிலையத்துக்கு இணையான வசதிகளை ஏற்படுத்துவதற்காக மறுசீரமைப்புப் பணிகளை தெற்கு ரயில்வே மேற்கொண்டுள்ளது.
நில அளவை, நிலப்பரப்பு ஆய்வு, மண் ஆய்வு, போக்குவரத்து ஆய்வு, மரங்கள் கணக்கெடுப்பு, அசையும், அசையா சொத்துகளின் கணக்கெடுப்பு மற்றும் ஒருங்கிணைந்த திட்ட சரிபார்ப்பு போன்ற பூர்வாங்கப் பணிகள் நிறைவடைந்துள்ளன. ராமேசுவரம் ரயில் நிலையத்தை மறுசீரமைக்கும் பணி கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு ரூ.90.20 கோடிக்கு
ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை முடிக்க 18 மாத கால அவகாசம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர திட்ட மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ள மும் பையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு ரூ.4.41 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் வழங்கப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.