கடலூர்/விருத்தாசலம்: என்எல்சியின் 2-வது சுரங்க விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து, பாமக சார்பில் கடலூர் மாவட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த முழு அடைப்புப் போராட்டத்தில் 50 சதவீதத்துக்கும் மேலாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நிலக்கரி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக, என்எல்சி இந்தியா நிறுவனம் அப்பகுதியில் உள்ள வேளாண் நிலங்களைக் கையகப்படுத்தி வருகிறது.
இதைக் கண்டித்து நேற்று கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு பாமக அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு, விவசாய சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
இதையடுத்து மாவட்டம் முழுவதும் 7 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். நிலம் கையகப்படுத்தப்பட உள்ள வளையமாதேவி, கீழ்பாதி, கரிவெட்டி, ஊ.ஆதனூர் கிராமங்களின் நுழைவாயில் பகுதியில் போலீஸார் தடுப்புக் கட்டைகளை அமைத்து, வெளியூரைச் சேர்ந்தவர்கள் கிராமத்தில் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று காலை முதலே நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. குறிஞ்சிப்பாடியில் காலையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, மதியம் திறக்கப்பட்டது. சேத்தியாத்தோப்பு, வேப்பூர், திட்டக்குடி பகுதியில் பாதி கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
விருத்தாசலம் நகர வரத்தக சங்கத்தினர் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவில்லை என்று அறிவித்திருந்த போதிலும், பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பண்ருட்டியில் காய்கறி மார்க்கெட் திறந்திருந்த போதிலும், சில கடைகள் திறந்தும், பல கடைகள் மூடப்பட்டும் இருந்தது. அதே நேரத்தில் கடலூர், சிதம்பரம், வடலூர், காட்டுமன்னார்கோவிலில் கடைகள் திறந்திருந்தன.
மாவட்டத்தில் அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கின. தனியார் பேருந்துகள் குறைந்த அளவே இயங்கின.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் இரவு 56 பாமகவினரை போலீஸார் கைது செய்திருந்த நிலையில், நேற்று காலை கடலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சண்முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட 40 பேரை கைது செய்தனர். குறிஞ்சிப்பாடியில் கடைகளை அடைக்கும்படி கூறிய 30 பாமகவினரை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு தனியார் பேருந்துகள் நேற்று இயக்கப்படவில்லை. அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின.
புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு போலீஸ் பாதுகாப்புடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன. புதுச்சேரி எல்லையான முள்ளோடையில், புதுச்சேரி பாமகவினர் அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
அண்ணாமலைநகரில் திறந்திருந்த இரு கடைகளின் மீது கல் வீசி தாக்கப்பட்டது. சிதம்பரம் சின்ன மார்க்கெட் பகுதியில் தனியார் பேருந்து, நெய்வேலி நகரியத்தில் அரசு பேருந்து ஒன்றின் மீது கல் வீசி தாக்கப்பட்டது. இதைத் தாண்டி பெரிய வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.
சிதம்பரத்தில் கடைகளை அடைக்குமாறு கூறிய பாமகவினர் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.