உடுமலை: புதிய குடிநீர் திட்டப் பணி சோதனை ஓட்டம் நடைபெறுவதால் உடுமலை கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டுள்ளது.
உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் இருந்து உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதி மக்களுக்கான குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில், அணையில் இருந்து விநாடிக்கு 21 கன அடி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. எனினும், கடந்த சில நாட்களாக வாளவாடி, பூலாங்கிணர், துங்காவி உள்ளிட்ட கிராமங்களில் போதிய குடிநீர் விநியோகிக்கப் படவில்லை எனக் கூறி, கிராம மக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, "33 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பூலாங்கிணர் கூட்டுகுடிநீர் திட்டம் காலாவதியாகிவிட்டது. இதற்கு மாற்றாக, 318 கிராமங்களை உள்ளடக்கிய புதிய கூட்டு குடிநீர் திட்டம் ஏற்படுத்தப்பட்டு, பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டத்தில் உள்ளது.
சில இடங்களில் பழைய இணைப்புடன் புதிய குழாய்களை இணைக்க வேண்டும். அப்போது, சில கிராமங்களுக்கு செல்லும் விநியோகத்தை நிறுத்த வேண்டியசூழல் ஏற்படுகிறது. இது குறித்த சரியான புரிதலும், விழிப்புணர்வும் இல்லாததுமே இதற்கு காரணம். விரைவில் சீர் செய்யப்படும். அனைத்து கிராமங்களிலும் சோதனை ஓட்டம் நிறைவடைந்த பின், திட்ட நோக்கத்தின் படி நபருக்கு நாளொன்றுக்கு 155 லிட்டர் குடிநீர் உறுதியாக விநியோகிக்கப்படும்" என்றனர்.