முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் | கோப்புப் படம் 
தமிழகம்

மத்திய அரசை எதிர்க்க திமுக அரசுக்கு தைரியம் இல்லை: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

சென்னை: என்எல்சி விவகாரத்தில் மத்திய அரசை எதிர்க்கும் தைரியம் திமுக அரசுக்கு இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளி சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று, பேரணியைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 18 முதல்35 வயதுக்கு உட்பட்ட இளைஞர் சமுதாயம்தான் போதைப் பொருட்களால் அதிகம் பாதிக்கப்படுகிறது. காவல்துறை மற்றும் காவல்துறை நுண்ணறிவுப் பிரிவை முடுக்கிவிட்டு, சர்வசாதாரணமாக போதை பொருட்கள் கிடைக்கும் நிலையை அரசு மாற்ற வேண்டும்.

எங்கள் ஆட்சியில் முழுமையான அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டதால், போதைப்பொருட்கள் புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் எங்குமே நில எடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. மத்திய அரசுடன் அதிமுக அரசு நல்லுறவை வைத்திருந்த நிலையிலும், விவசாயிகள் பக்கம் நின்று, அவர்களுக்கு அதரவாக அதிமுக அரசு இருந்தது.

எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை எதிர்க்கிறோம் என கூறிவரும் திமுக அரசு, மத்திய அரசுக்கு ஆதரவாக என்எல்சி நிறுவனத்துக்காக விவசாயிகளின் நில எடுப்பை மேற்கொள்வது மக்கள் விரோத போக்காகும். மத்திய அரசை எதிர்க்கும் தைரியம் திமுக அரசுக்கு இல்லை. மத்திய அரசின் கொத்தடிமையாக திமுக செயல்பட்டு வருகிறது என்றார்.

SCROLL FOR NEXT