தமிழகம்

கோவை சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி; 15 பேர் படுகாயம்

ஆர்.கிருபாகரன்

கோயம்புத்தூர் சோமனூர் பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகினர், 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இத்தகவலை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி உறுதி செய்துள்ளார்.

இறந்தவர்களில் ஒருவர் அரசுப் பேருந்து நடத்துனர் சிவக்குமார் (40) என்று கண்டறியப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 3 பேர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் 5 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதில் மூவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதுகுறித்துப் பொது மக்கள் கூறும்போது, 1996-ல் அன்னூர் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. அதைக் கட்டும்போதே ஒருமுறை இடிந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து நிறைய முறை மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.

அதுபற்றி கருமத்தம்பட்டி பேரூராட்சி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமான மனு அளித்தோம். ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

6 மாதங்களுக்கு முன்பு பேருந்து நிலையத்தில் புதுப்பித்தல் பணிகள் என்ற பெயரில் டைல்ஸ் மட்டுமே ஒட்டப்பட்டது. அத்துடன் தாய்மார் பாலூட்டும் அறை அமைக்கப்பட்டது.

பேருந்து நிலையத்தில் அழகுபடுத்தல் பணிகள் மட்டுமே நடைபெற்றன. பிரச்சினைக்குரிய மேற்கூரைப் பகுதிகளை சரிசெய்யவில்லை என்று குற்றம் சாட்டினர்.

இறந்தவர்கள் குடும்பத்துக்கும் காயமடைந்தவர்களுக்கும் விரைவில் அரசு தரப்பில் இழப்பீடு வழங்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT